இயக்குநர் அட்லியின் அடுத்தப் படத்தில் சல்மான் கான் நாயகனாக நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. அதில் கமல் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘ஜவான்’. உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இந்தப் படத்துக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் நடிப்பதற்கு பல்வேறு நடிகர்கள் முன்வந்தார்கள். ஆனால், அட்லியோ கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
தற்போது தனது அடுத்தப் படத்தின் கதையை அட்லி முடிவு செய்துவிட்டார். இதில் சல்மான் கான் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. முழுமையான திரைக்கதை வடிவத்தை விரைவில் சல்மான் கானை பார்த்து சொல்ல இருக்கிறார் அட்லி. இதில் இன்னொரு வலுவான கதாபாத்திரம் இருக்கிறது. அதில், கமலை நடிக்க வைக்க அணுகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரித்தபோது, “அட்லி – சல்மான்கான் இணைவது உறுதி. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கி, 2026-ம் ஆண்டு வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அதில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை” என்று தெரிவித்தார்கள்.