சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் அதிகாலைக் காட்சி கேரளாவில் தொடங்கியது. நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் இன்று (செப்.05) திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழகத்தில் ‘தி கோட்’ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க அரசு அனுமதியளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின்போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு எந்த படத்துக்கு அதிகாலை காட்சி அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் ‘தி கோட்’ படம் தமிழகத்தில் 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது.
ஆனால் அருகில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அதிகாலை காட்சி திரையிடப்படுகிறது. கேரளாவில் முதல் காட்சி 4 மணிக்கும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவில் 6 மணிக்கு தொடங்குகிறது. இதனால் தமிழகத்திலிருந்து விஜய் ரசிகர்கள் பலரும் நேற்று இரவே அண்டை மாநிலங்களுக்கு ‘தி கோட்’ படம் பார்ப்பதற்காக சென்றுள்ளனர். மேலும் நள்ளிரவு முதலே திரையரங்க வளாகங்களில் பிரம்மாண்ட பேனர்கள் வைத்து, பட்டாசு வெடித்தும், மேள தாளங்களுடனும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.