அமராவதி: ஆந்திராவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் ரூ.25 லட்சத்தை ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆந்திராவில் என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கடந்த 3 நாட்களாக ஆந்திராவில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கிட்டத்தட்ட 4.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் மூழ்கி 6 பேர் பலியாகியுள்ளதால் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் ரூ.25 லட்சத்தை ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து நடந்து வரும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை வழங்குவதாக நாங்கள் உறுதியளிக்கிறோம்.
இந்த மாநிலம் எங்களுக்கு நிறைய கொடுத்துள்ளது. இந்த சவாலான நேரத்தில் அதை திரும்ப கொடுப்பதே எங்கள் கடமை என்று நினைக்கிறோம். இது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் சமூகங்கள் மீதான அன்பு மற்றும் மரியாதைக்கான ஒன்று என்பதையும் நாங்க குறிப்பிட விரும்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் கடைசியாக பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கிய ‘கல்கி 2898 ஏடி’ படத்தை தயாரித்திருந்தது. இப்படம் அனைத்து மொழிகளிலும் வசூல்ரீதியாக வரவேற்பை பெற்றிருந்தது.
Let’s strive for a better tomorrow.@AndhraPradeshCM pic.twitter.com/AvneI83YAo
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) September 2, 2024