சினிமாவில் ஹீரோ, ஹீரோயினுக்குத்தான் முக்கியத்துவம் என்றாலும் குணசித்திர நடிகர்களின் பங்கு தவிர்க்க முடியாதது. பல கதைகளில் தூணாக இருப்பது அவர்கள்தான். கதாபாத்திரங்களாகவே வாழ வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது.
தமிழில் கவனிக்கப்படும் குணசித்திர நடிகர்களில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார் காளி வெங்கட். காமெடியனாக அறிமுகமாகி, குணசித்திர நடிகராக உயர்ந்திருக்கும் காளி வெங்கட், இன்னும் மண்மணம் மாறாத தெற்கத்தி மனிதர்!
“சினிமாவுல இப்படியாகணும் அப்படியாகணும்னு எந்த லட்சியமும் எனக்கு இருந்ததில்லை. நடிக்கணுங்கற ஒரே ஆசை மட்டும் இருந்துச்சு. நான் முதல் முதலா நடிச்ச படம், ‘தசையினை தீச்சுடினும்’. அந்தப் படம் வெளிவரலைன்னாலும் அதன் இயக்குநர் விஜய பிரபாகரன் தான் என்னை நடிகனா மாற்றினார்.
இன்னைக்கு நான் இப்படி இருக்கேன்னா, அதுக்கு அவர்தான்காரணம். என்னை முழுமையா அடையாளம் காட்டின படம் ‘முண்டாசுப்பட்டி’. அதுதான் சினிமாவுல எனக்கும் கதவை திறந்துவிட்டது. பிறகு ‘இறுதிச்சுற்று’. இந்தப்படம் இப்படியும் இவரால நடிக்க முடியும்ங் கறதை வெளிக்காட்டுச்சு” – பிளாஷ்பேக்கோடு ஆரம்பிக்கிறார் காளி வெங்கட்.
வெங்கடேசன் எப்படி காளி வெங்கட் ஆனார்? – ‘தசையினை தீச்சுடினும்’ படத்துல என் கேரக்டர் பெயர் ‘காளி’. சமூக வலைதளங்கள்ல ஐடி கிரியேட் பண்ணும்போது வெங்கட்-ங்கற பெயர் நிறைய இருந்தது. பிறகு என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். வெங்கட் கூட காளியை சேர்த்து ஐடி கிரியேட் பண்ணினேன். படங்கள்
லயும் காளி வெங்கட்டுன்னே போட ஆரம் பிச்சாங்க. திட்டமிட்டு எதுவும் பண்ணலை. அதுவாகவே அமைஞ்சது.
முதல்ல நகைச்சுவை நடிகராகத்தான் ஆரம்பிச்சீங்க… ஆமா. இயக்குநர்கள், ‘இந்த கேரக்டர் உங்களுக்கு நல்லாயிருக்கும், பண்ணுங்க’ன்னு சொல்லும்போது, நான் மறுக்க முடியாதில்லையா? தொடர்ந்து சில சீரியஸ் கேரக்டர்கள் வந்ததால அதுலயே தொடர்றேன். எல்லாமே நடிப்புதானே. காமெடி, குணசித்திரம், வில்லன் எதுவா இருந்தாலும் பண்ணணும். நடிகனுக்கு அதுதானே வேலை.
‘இறுதிச்சுற்று’ சாமிகண்ணு, ‘கார்கி’ இந்திரன்ஸ் கலியபெருமாள், ‘அநீதி’ தங்கப்புள்ளனு உங்க கேரக்டர் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்…எப்படி அதுக்குள்ள உருமாறுறீங்க? – இயக்குநர்கள்தான் காரணம். ‘அநீதி’ படத்துல வசந்தபாலன் சார், அந்த கேரக்டரின் தன்மையை, நடை, உடை பாவனையில இருந்து, இப்படி பேசணும், அப்படி பார்க்கணும்னு எல்லா ஸ்கெட்சையும் பக்காவா வச்சிருந்தார். அவருக்கு யாராவது இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கலாம். அதை எனக்குள்ள புகுத்தினார். அந்த கேரக்டர் பேசப்பட்டதுக்கு அவர்தான் காரணம். அதே மாதிரிதான் மற்ற கேரக்டர்களுக்கும் அந்தந்த படங்களோட இயக்குநர்கள்தான் காரணம்.
வில்லனாகவும் ஒரு படத்துல நடிச்சிருக்கீங்களாமே? – ஆமா. முருகேஷ் இயக்கி இருக்கிற ‘மலை’ படத்துல வில்லனா நடிச்சிருக்கேன். இதுவரை நான் பண்ணாத கேரக்டர். அவர்தான், ‘நீங்க வில்லனா நடிச்சா எப்படியிருக்கும்?’னு கேட்டார். ‘தெரியாது, பண்றேன்’ன்னு சொல்லிட்டேன். மலைகிராமத்துல நடக்கிற கதை. ஊர் தலைவரா நடிச்சிருக்கேன்.
நீங்க, விஜய் சேதுபதிலாம் ஒரே நேரத்துல வாய்ப்பு தேடினவங்க… இப்பவும் தொடருதா அந்த நட்பு? – அவர் எனக்கு சீனியர். எனக்கு முன்னாலயே அவர் வாய்ப்பு தேடிட்டு இருந்தார். இருந்தாலும் அப்பவே நிறைய ‘கைடு’ பண்ணுவார். அது இப்பவும் தொடருது. முன்னாடி மாதிரி நேர்ல சந்திக்க முடியலைன்னாலும் போன்ல பேசிக்கிறோம். நடிச்ச படங்கள் பார்த்துட்டு பேசுவார். நானும் அவர் படங்களை பார்த்துட்டு பேசுவேன். நம்மை அப்டேட் பண்ணிக்கிறதுக்கு அவர் அனுபவத்துல இருந்து நிறைய டிப்ஸ் கொடுப்பார்.
கதையின் நாயகனா நடிச்சதை அடுத்த கட்டம்னு சொல்லலாமா? – இல்ல. எதையும் அடுத்தக் கட்டமாகவோ, இதுல இருந்து அதுக்கு தாண்டிப் போகணும்னோ, நினைச்சது இல்லை, அப்படி எந்த வரையறையும் வச்சுக்கிறது இல்லை. கதையின் நாயகனா நடிக்க கதைகள் வரும்போது, அது சரியா வருமான்னு யோசிச்சுதான் பண்றேன். வர்ற எல்லாத்தையும் ஏத்துக்கறதும் இல்லை. சில நேரம், அப்ப இருக்கிற ‘இஎம்ஐ’ அழுத்தத்தை பொறுத்தும் இந்த முடிவு மாறும். அதனால சின்ன கேரக்டர், பெரிய கேரக்டர், கதையின் நாயகன் அப்படிங்கற எந்த அளவுகோலும் வச்சுக்கிறதில்லை.
உங்க வாழ்க்கையை, இப்ப திரும்பிப் பார்த்தா எப்படி இருக்கு? – ரொம்ப சர்ப்பிரைசா இருக்கு. நாளைக்கு என்ன நடக்கும்னு தெரிஞ்சா, வாழ்க்கையில என்ன சுவாரஸ்யம் இருக்கும்? அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு தெரியாத இந்த வாழ்க்கையில இப்ப நான் இருக்கிற இடமே எனக்கு பெருசுதான். இப்ப கிடைச்சிருக்கிற இந்த சினிமா வாழ்வே, என் லட்சியத்தை மீறுனதுதான்.
முதல்லயே சொன்ன மாதிரி, பெரிய திட்டம் போட்டுலாம் நான் சினிமாவுக்கு வரலை. முயற்சி பண்ணினேன். நாலஞ்சு படம் பளிச்சுனு தெரியற மாதிரி நடிச்சா கூட போதும்னு நினைச்சுதான் வந்தேன். வாழ்க்கையை அதன் போக்குல அனுபவிச்சுட்டு இருக்கேன். நான் ஆசைப்பட்ட இந்தப் பயணம் சுகமாகவே இருக்கு.