அதிகரிக்கும் பொருட்செலவு, படத்தின் நீளம் என சிக்கலில் இருக்கிறது ‘விடுதலை 2’ படக்குழு. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விடுதலை’. எல்ரெட் குமார் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் முடிவிலேயே இரண்டாம் பாகத்துக்கான ட்ரெய்லரும் இணைக்கப்பட்டது.
2-ம் பாகத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கான பின்புலம் முழுமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத காரணத்தினால் சிக்கலில் இருக்கிறது படக்குழு. டிசம்பர் 20-ம் தேதி வெளியாக இருப்பதால், அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேகப்படுத்தி இருக்கிறார்கள்.
மேலும், படத்தின் தற்போதைய நீளமே 4 மணி நேரம் இருக்கிறது. தற்போது படமாக்கப்பட்டு வரும் காட்சிகளையும் இணைத்தால் இன்னும் நேரம் அதிகரிக்குமே என்ற கவலையில் இருக்கிறது படக்குழு. இதனால் திரையரங்குக்கு 2:30 மணி நேர படமாக கொடுத்துவிட்டு, முழுமையான படத்தினை ஓடிடி வெளியீட்டுக்கு கொடுத்துவிடலாம் என்று இப்போதைக்கு முடிவு செய்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் ரயில் கவிழும் காட்சியினை காட்சிப்படுத்திய இடத்திலேயே, 2-ம் பாகத்துக்கு ஒரு கிராமத்தை அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.