சென்னை: எலான் மஸ்க்குடன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நின்றிருக்கும் ‘ஏஐ’ புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, “இது உண்மையாக நிகழ வேண்டும்” என விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக கடந்த மாதம் 27-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டார். சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா சென்றார்.தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்த பிறகு, செப்.14-ம் தேதி அவர் தமிழகம் திரும்புவது போல பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் முதல்வர், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குடன் சந்திப்பை நிகழ்த்த இயக்குநர் வெங்கட் பிரபு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலினும், எலான் மஸ்க்கும் சந்திக்கும் ‘ஏஐ’ புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அதில், “இந்த ‘ஏஐ’ புகைப்படம் உண்மையாக வேண்டும் என விரும்புகிறேன். தமிழகத்துக்கு டெஸ்லா வந்தால், அது நமது முதல்வரின் சிறப்பான (‘GOAT’) நடவடிக்கையாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.