‘கங்குவா’ படத்தை நவம்பர் 14-ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளது படக்குழு. சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
முதலில் இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதே தேதியில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ‘கங்குவா’ வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ‘கங்குவா’ படத்துக்காக பொருத்தமான வெளியீட்டு தேதிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியில் நவம்பர் 14-ம் தேதி சரியாக இருக்கும் என கருதியிக்கிறது. இந்த தேதியை வைத்து அனைத்து மொழி விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது.
எந்தவொரு எதிர்ப்பும் எழாத பட்சத்தில் நவம்பர் 14-ம் தேதி வெளியீட்டை படக்குழு ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறது. ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியாக இருப்பதால், தணிக்கை பணிகளை முன்கூட்டியே முடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.