தொடர்ந்து பேசிய அவர், “சினிமாவில் அஜித், விஜய் போன்ற ஒரு சதவிகித பேர்தான் நன்றாக உள்ளனர். மீதம் 99 சதவிகிதம் பேரின் வாழ்க்கை அன்றாடங்காய்ச்சியாகத்தான் இருக்கிறது. மக்களை சிரிக்க வைப்பதற்காக கிட்டத்தட்ட 30, 40 வருடங்கள் நாங்கள் உழைத்துக்கொண்டேதான் இருக்கிறோம். மரணம் பக்கத்தில் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. 4 அடி உயரத்தில் இருந்து குதி என்றாலும் 5 அடி உயரத்தில் இருந்துகூட குதிக்க எங்களது ஸ்டன்ட் மாஸ்டர்கள் தயாராக இருப்பார்கள். சாதாரண லைட்மேனில் இருந்து அனைவரும் கடுமையாக உழைப்பார்கள். சென்னையில் எங்களால் வாடகை கொடுத்து வாழ முடியாத சூழ்நிலையால், சென்னை புறநகர்ப் பகுதியில் குறைந்த வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.
மற்றவர்கள் 8 மணி நேரம் வேலை பார்க்கும் நிலையில், நாங்கள் 18 மணி நேரம் வேலை செய்கிறோம். ஆனால், எங்களுக்கு அரசு தரப்பில் எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை. கலைஞர் எங்களுக்கு ஒரு மகத்தான திட்டத்தை கொடுத்தார், கலைஞர் ஆட்சிக்காலத்தில் எங்களுக்கு காப்பீடு திட்டம் கொடுத்தார். தமிழகத்தில் அடுத்ததாக வந்த ஆட்சி கலைஞர் என்று பெயர் கொண்டதால், அந்த திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. கலைஞர் இருந்தவரை எங்களுக்கு பாதுகாப்பு இருந்தது. சினிமா துறையில் உள்ள 25 ஆயிரம் பேருக்கு மருத்துவ உதவிகள், வீடுகள் கட்டித் தர வேண்டும் என முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.