நடிகர் விஜய் சேதுபதி, தனது ரசிகர் நற்பணி இயக்கத்தின் செயலாளரின் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டியிருக்கிறார்.
விஜய்சேதுபதி இப்போது “விடுதலை 2′ படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கி வரும் இதன் படப்பிடிப்பு வண்டலூர் அருகே நடந்து வருகிறது. இந்த ஸ்பாட்டில் தான் இதற்கு முன்னர் ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பும் நடந்தது. இங்கே ரயில் விபத்துக்கான காட்சிகளுக்காக அரங்கம் அமைத்து படமாக்கினார்கள். இப்போது அதே இடத்தில் தான் ‘விடுதலை 2’ படப்பிடிப்பும் நடந்து வருகிறது. மஞ்சுவாரியர், கிஷோர், போஸ்வெங்கட் என பலரும் நடித்து வருகின்றனர்.
‘விடுதலை 2’ தவிர ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ ஆறுமுக குமாரின் இயக்கத்தில் ‘ஏஸ்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். அதில் அவரது ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். தவிர, யோகிபாபு, பப்லு, ‘கே.ஜி.எஃப்’ வில்லன் அவினாஷ் என பலரும் நடித்துள்ளனர். இந்தியில் பல படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணி வரும் கரண் ராவத், முதன் முறையாக தமிழுக்கு வருகிறார்.
இந்நிலையில் ‘விடுதலை 2’ படப்பிடிப்பில் இருந்த விஜய்சேதுபதி, தனது ரசிகர் நற்பணி மன்ற செயலாளர் குமரனின் குழந்தைக்கு ‘கணியன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். விஜய்சேதுபதியிடன் நற்பணி இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் குமரனுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு விஜய்சேதுபதிதான் பெயர் சூட்டவேண்டும் என விரும்பினார். இதற்கு விஜய்சேதுபதியும் மகிழ்வுடன் சம்மதித்து, ‘விடுதலை 2’ ஸ்பாட்டிற்கு வரச் சொல்லியிருந்தார். அங்கே குழந்தைக்கு ‘கணியன்’ என பெயர் சூட்டினார். பெயர் சூட்டியதும், குழந்தையின் காதில் மூன்று முறை பெயரை சொல்லியும் மகிழ்ந்தார் விஜய்சேதுபதி.