மலையாள நடிகை ஒருவர், கடந்த 2017-ம் வருடம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதைத் தொடர்ந்து, மலையாள சினிமா துறையில் பணிபுரியும் பெண்களுக்காக ‘விமன் இன் சினிமா கலெக்டிவ்’ (WCC) என்ற அமைப்புத் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தொடர் கோரிக்கையால்தான் மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டியின் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றி சில நடிகைகள் வெளிப்படை யாகப் பேசி வருகின்றனர். இதனடிப்படையில் சில நடிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகைகளின் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்புப் புலனாய்வுக் குழுவை கேரள அரசு நியமித்துள்ளது. இந்நிலையில் ‘விமன் இன் சினிமா கலெக்டிவ்’ உறுப்பினர்களான நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், பீனா பால் மற்றும் தீதி தாமோதரன் உள்ளிட்டோர் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேற்று சந்தித்தனர். அப்போது ஹேமா கமிட்டியின் முன் சாட்சியம் அளித்தவர்களின் தனியுரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு தனியுரிமையை மீறக்கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.