2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்திய சார்பாக ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் தேர்வு செய்து அனுப்பப்பட்டிருக்கிறது.
நடப்பாண்டு ஆஸ்கர் விருதிற்கான ‘சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவு’ போட்டிக்கு அனுப்ப, இந்தியா சார்பில் மொத்தம் 29 படங்களைப் பரிசீலித்து, அதில் லாபத்தா லேடீஸ் படத்தைப் பரிந்துரைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆமிர் கான் தயாரிப்பில் அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது ஆஸ்கர் விருதுக்கும் தேர்வாகி இருகிறது.
இதனைத்தொடர்ந்து படத்தின் இயக்குநரான கிரண் ராவ் பேசியப்போது, ” ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் அதிகாரபூர்வ நுழைவாக எங்களின் ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த அங்கீகாரம் எனது முழு படக்குழுவினரின் அயராத உழைப்புக்கு கிடைத்த ஒரு சான்றாகும். அவர்களின் அர்ப்பணிப்பும் ஆர்வமும்தான் இந்த கதையை உயிர்ப்பித்தது” என்று நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த நிதான்ஷி கோயல் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். “இந்தப் படத்தில் நான் நடிக்கும்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். படப்பிடிப்பின்போது எனக்கு தேர்வுகள் நடைபெற்று கொண்டிருந்தது. அதனால் படப்பிடிப்பின்போது நான் கணிதம் மற்றும் அறிவியல் புத்தகங்களை எடுத்து செல்வேன்.
காட்சிகளை எடுத்து முடித்தப் பின்பு கிடைக்கும் இடைவெளியில் படிப்பேன். நான் எந்த மாதிரியான கதைக்களம் கொண்ட ஒரு படத்தில் நடித்திருக்கிறேன் என்று அப்போது என்னால் என் குடும்பத்தினரைத் தவிர்த்து யாரிடமும் கூற முடியவில்லை. ஆனால் படம் வெளியான பிறகு படத்தைப் பார்த்தப் பலரும் என்னைப் பாராட்டினார்கள். நான் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.