தனுஷ் இயக்கத்தில் உருவாகும் ‘இட்லி கடை’ படத்தில் தான் நடிக்கவில்லை என நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.
தனுஷ், நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இட்லி கடை’. தனுஷ் இயக்கி, நாயகனாகவும் நடித்து வருகிறார். இதனை ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தப் படத்தில் தனுஷுக்கு தம்பியாக அசோக் செல்வன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ‘இட்லி கடை’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, இதில் அசோக் செல்வன் நடிக்கவுள்ளார் என்று பலரும் பகிர்ந்து வந்தார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அசோக் செல்வன்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்தது: “எனக்கு தனுஷ் சாரை ரொம்பப் பிடிக்கும். அவருடைய ரசிகன் நான். அவருடன் வருங்காலத்தில் இணைந்து பணியாற்றுவேன். ‘இட்லி கடை’ படத்தில் நான் நடிக்கவில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்” என அசோக் செல்வன் ட்வீட் செய்துள்ளார்.
‘இட்லி கடை’ படத்தின் தேனி படப்பிடிப்பினை முடித்துவிட்டு சென்னையில் அரங்குகள் அமைத்து சில காட்சிகளை படமாக்கவுள்ளது படக்குழு. அதனைத் தொடர்ந்து துபாயிலும் சில முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளார்கள்.