சென்னை: “தமிழ் சினிமாவில் இதுவரை அப்படி எதுவும் நடக்காததால், ஹேமா கமிட்டி போன்ற ஒரு கமிட்டி இங்கே தேவைப்படவில்லை. நம் திரையுலகம் நன்றாகத்தான் உள்ளது” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ”நகரத்தில் வாழும் பலரும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க யோசிப்பார்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் சமீபகாலமாக புதுப்புது திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. காலை உணவுத் திட்டம் தொடங்கி நல்ல கல்வி கொடுப்பது என பல வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பான விழிப்புணர்வை அரசு பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும். இந்த வசதிகளெல்லாம் அரசு பள்ளியில் இருப்பதே பலருக்கும் தெரியவில்லை” என்றார்.
தொடர்ந்து அவரிடம் தமிழ் சினிமாவில் ஹேமா கமிட்டி போன்ற ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா என கேட்டதற்கு, “தமிழ் திரையுலகில் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. கண்டிப்பாக அப்படி எதுவும் இருக்காது என நான் நம்புகிறேன். நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் படம் நடித்துள்ளேன். நான் இதுவரை அப்படியொரு பிரச்சினையை எதிர்கொண்டதில்லை.
பெண்கள் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம். தமிழ் திரையுலகில் அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்படி நடந்தால் பூதாகரமாக வெடித்திருக்கும். இது போன்ற சம்பவங்கள் நடந்தால் கண்டிப்பாக கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். தமிழ் சினிமாவில் இதுவரை அப்படி எதுவும் நடக்காததால், ஹேமா கமிட்டி போன்ற ஒரு கமிட்டி இங்கே தேவைப்படவில்லை. நம் திரையுலகம் நன்றாகத்தான் உள்ளது” என்றார்.