ஆரம்பகால தமிழ் சினிமாவில், புராணம் மற்றும் பக்தி படங்களே அதிகம் உருவாக்கப்பட்டன. கதையாகக் கேட்ட விஷயங்களை, திரையில் பார்ப்பதை மக்கள் அதிகம் விரும்பியதால் அதுபோன்ற படங்கள் உருவாயின. அப்படி உருவான படங்களில் ஒன்று, ‘துகாராம்’. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாராஷ்டிர ஆன்மிக ஞானி ‘துகாராம்’ கதையை, 1921-ல் ஷிண்டே என்பவர் மவுனப்படமாக இயக்கினார். கலாநிதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் அதே ஆண்டில் ‘சந்த் துகாராம்’ என்ற பெயரில் மற்றொரு படத்தைத் தயாரித்தது. 1936-ல் துகாராமின் வாழ்க்கைச் சம்பவங்களை வைத்து மராத்தியில் ஒரு படம் உருவானது. இந்தப் படத்தின் வெற்றிதான் தமிழ், தெலுங்கில் ‘துகாராம்’ கதையை படமாக்கத் தூண்டியது.
கோவையை சேர்ந்த சென்ட்ரல் ஸ்டூடியோஸ் தயாரித்த இந்தப் படத்தை பாலகிருஷ்ணன் நாராயண நாயர் என்ற பி.என்.ராவ் இயக்கினார். இவர் இந்தியில் வீர்குமாரி (1935 ), கீம்தி குர்பானி (1935) ஆகிய படங்களை இயக்கிவிட்டு தமிழுக்கு வந்தவர். பின்னர், ரம்பையின் காதல் (1939), பூலோக ரம்பை (1940), சாலிவாகனன் (1944) உட்பட பல படங்களை இயக்கினார்.
தமிழில் ‘துகாராம்’தான் பி.என்.ராவுக்கு முதல் படம் என்பதால், மொழி புரியாமல் ஆரம்பத்தில் தடுமாறியிருக்கிறார். அந்தக் காலகட்டத்தில், கர்நாடக இசைக் கலைஞர்களை நடிக்க வைப்பது டிரெண்ட்டாக இருந்தது. இதிலும் கர்நாடக இசைப் பாடகர் ஒருவரை, துகாராமாக நடிக்க வைக்கலாம் என்று சங்கீத வித்வான் முசிறி சுப்பிரமணிய ஐயரை தேர்வு செய்தனர். தனது சிறந்த குரலால் அப்போது உச்சத்தில் இருந்த அவருக்கு நடிப்பு எளிதாக வரவில்லை.
படத்துக்காக அவர் மீசை வைக்க வேண்டும். கர்நாடக இசைக் கலைஞர்கள் அப்போது மீசை வைத்துக்கொள்வதில்லை. அதனால் அவருக்கு ‘ஸ்பிரிட் கம்’ மூலம் ஒட்டு மீசை வைத்தார்கள். பசை உலர்ந்துவிட்டால் தோல் எரிந்து இழுக்கும். இது அவருக்குப் பெரும் எரிச்சலைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் முடியாமல் படப்பிடிப்பில் அழுது விட்டார். இதனால் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு, அவருக்கு மீசை வளரும் வரை காத்திருந்தது படக்குழு. வளர்ந்த பிறகுதான் மற்ற காட்சிகளைப் படம் பிடித்தார்கள். மீசையுடன் இசைக் கச்சேரிகளுக்குச் செல்ல வெட்கப்பட்டதால், படப்பிடிப்பு முடியும் வரை அந்தப் பக்கம் போகாமல் இருந்தாராம் முசிறி.
இந்தப் படத்தில் கே.சாரங்கபாணி, ஆர்.பாலசுப்பிரமணியன், சொக்கலிங்க பாகவதர், ஆர்.பாலசரஸ்வதி, எஸ்.முருகேசன் என பலர் நடித்தனர். இந்தப் படம் தெலுங்கிலும் உருவானது. அங்கு சி.எஸ்.ஆர். ஆஞ்சநேயலு, துகாராமாக நடித்தார். இந்தப் படம் வெற்றி பெற்றாலும் இந்த ஒரே படத்துடன் முசிறி சுப்பிரமணிய ஐயர் நடிப்பதை நிறுத்திவிட்டார். 1938-ம் ஆண்டு இதே நாளில் வெளியான ‘துகாராம்’ படத்தின் பிரின்ட் இப்போது இல்லை என்பது சோகம். துகாராம் பற்றி மேலும் சில படங்கள் உருவாகின. தெலுங்கில் 1973-ம் ஆண்டு உருவான ‘பக்த துகாராம்’ படத்தில் ஏ.நாகேஸ்வர ராவ் நடித்தார். இதில் சிவாஜி கணேசன், வீர சிவாஜியாக நடித்திருந்தார்.