தெலுங்கில் ‘தி கோட்’ படத்தின் தோல்வியால் நானியின் படத்துக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தி கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இதில் யுவன் இசையமைத்துள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூல் நன்றாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
அதேவேளையில் ‘தி கோட்’ திரைப்படம் தெலுங்கில் படுதோல்வியை தழுவி இருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ‘தி கோட்’ படத்தின் தெலுங்கு பதிப்பை வெளியிட்டது. சுமார் 12 கோடி ரூபாய்க்கு இந்த உரிமம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், முதல் இரண்டு நாட்களில் தெலுங்கில் 5 கோடி ரூபாய் அளவுக்கே வசூல் செய்தது. அதற்கு பின்பு யாருமே ‘தி கோட்’ படத்தை சீண்டவில்லை. இதனால் தெலுங்கில் படுதோல்வியை தழுவுவது உறுதியாகிவிட்டது. இந்த தோல்வியால் நானியின் படத்துக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘சரிபோதா சனிவாரம்’ திரைப்படம் ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியானது. நல்ல வசூல் செய்து வந்தாலும், ‘தி கோட்’ வெளியீட்டால் பல திரையிரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. தற்போது ‘தி கோட்’ தோல்வியால் மீண்டும் பல்வேறு திரையரங்குகளில் ‘சரிபோதா சனிவாரம்’ படத்தினை திரையிட்டுள்ளனர். எனவே, மீண்டும் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது ‘சரிபோதா சனிவாரம்’ படக்குழு.
கேரளா மற்றும் கர்நாடகாவில் ‘தி கோட்’ படத்தின் முதலீட்டுக்கு வசூல் மோசமில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனாலும், வரும் நாட்களில் வசூல் நிலவரங்கள் வெளியாகும் போதுதான் முழுமையான உண்மை நிலை என்ன என்பது தெரியவரும்.