இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் நடைபெற்ற நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய நடிகர் கார்த்தி, “கடந்த மூன்று மாதங்களாகக் கட்டடப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. டிசம்பர், நவம்பர் மாத மழைக்கு முன்னாள் வெளிப்புற கட்டடப் பணிகளை முடித்துவிட வேண்டும் என்பதுதான் இலக்கு. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டடப் பணிகள் முடித்துத் தருவதாகக் கூறியிருக்கிறார்கள். ரஜினி சாரும் கமல் சாரும் இணைந்து நிதி திரட்டுவதற்கான கலை நிகழ்ச்சிகளில் நடிப்பதாகக் கூறியிருக்கிறார்கள். நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜய் சார், கமல் சார், தனுஷ், சிவகார்த்திகேயன் எனப் பலர் நிதியுதவி அளித்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார். எந்தெந்த நடிகர்கள் எவ்வளவு நிதியுதவி அளித்திருக்கிறார்கள் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்காக நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசன், நடிகர் தனுஷ், நடிகர் கார்த்தி, நடிகர் சூர்யா, நடிகர் நெப்போலியன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார்கள். இதைத் தாண்டி உதயநிதி ஸ்டாலினிடமிருந்து கூடுதலாக 5 கோடி ரூபாய் நிதியும் கிடைத்திருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயனும் முன்வந்து 50 லட்ச ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். இவர்களைத் தாண்டி சில நடிகர்கள் கடனாகவும் நிதி அளித்திருக்கிறார்கள் எனத் தெரிவித்திருக்கின்றனர்.