ஜூனியர் விகடனில் வெளியான ‘வேட்டை நாய்கள்’ தொடரின் திரைப்பட உரிமத்தை இயக்குநர் சுதா கொங்காரா பெற்றுள்ளார்.
‘வேட்டை நாய்கள்’ நெடுந்தொடர் அதிகாரத்தை அடைவதற்கு மனிதர்கள் என்னென்ன வன்முறை செயல்களை செய்கிறார்கள் என்பதைப் பற்றியது ஆகும். இந்த கதை தூத்துக்குடியை கதைக்களமாக கொண்டது.
இந்த கதையின் திரைக்கதை உரிமத்தை சுதா கொங்காரா பெற்றுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நரனின் ‘வேட்டை நாய்கள்’ தூத்துக்குடியின் கடலிலும், கரையிலும் உள்ள மற்றும் புதைந்துள்ள உலகத்தை சொல்கிறது.
இந்த அற்புதமான கதையின் உரிமத்தை பெற்றுள்ளேன். இந்த நாவலின் திரைக்கதை பணி தொடங்குவதில் மிக மிக ஆர்வமாக உள்ளேன். திரைக்கதை பணிப் பயணம் சற்று கடினமானதாக இருந்தாலும் மகிழ்ச்சிகரமானது தான்.
இந்த படம் மூலம் நான் பார்த்திராத ஒரு வாழ்க்கையை வாழப்போகிறேன் – இது ஒரு பட இயக்குனருக்கான மிகப்பெரிய வெகுமதி.
இது அனைத்துக்கும் மேலாக யார் இதில் நடிக்கப்போகிறார்கள் என்பது மிக முக்கியம். யார் இந்த கதைக்கு உயிர் தரப்போகிறார்?” என்று பதிவிட்டிருக்கிறார்.
இதற்கு நன்றி சொல்லும்விதமாக எழுத்தாளர் நரன், “மகிழ்ச்சியான செய்தி…எனது வேட்டை நாய்கள் நாவலை இயக்குனர் சுதா கொங்காரா அவர்கள் திரைப்படமாக்க உரிமை பெற்றிருக்கிறார். திரைக்கதை பணிகள் துவங்குகிறது. நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த வேட்டை நாய்கள் புத்தக வெளியீட்டு விழாவில், “இப்போ வரைக்கும் ‘வேட்டை நாய்கள்’ நாவலோட பத்து அத்தியாயத்தை படிச்சிருக்கேன். அந்த கதை என்னை முழுமையாக ஈர்த்து அந்த கதை உலகத்துல வாழுற மாதிரி பீல் கொடுத்துச்சு” என்று இயக்குனர் சுதா கொங்காரா பேசியது நினைவு கூரத்தக்கது.