இந்த விவகாரம் தமிழ்த் திரையுலகிலும் விவாதத்தைக் கிளப்பியது. இந்நிலையில் இன்று (4.9.2024) தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் உறுப்பினர்களான சுஹாசினி, குஷ்பு, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் ‘தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி’ ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்த்துறையில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது, நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருந்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வழக்கறிஞர் குழுவை நியமனம் செய்வது, பாலியல் புகார்களை நேரடியாக மீடியாக்களில் பேசக் கூடாது, 5 ஆண்டுகள் தடை உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தீர்மானங்கள் இவைதான்.
தீர்மானங்கள்
1. பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில், அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
2. பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும்.