எர்ணாகுளம்: பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மலையாள நடிகர் நிவின் பாலி மீது எர்ணாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை அண்மையில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இதன் அடிப்படையில் மலையாள நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் துறை வழக்குப் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாலியல் புகார் ஒன்றில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியும் சிக்கியுள்ளார்.
எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) புகார் ஒன்றை அளித்தார். அதில் பட வாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தெரிவித்துள்ளார். அவரது புகாரை பதிவு செய்த சிறப்பு புலனாய்வு குழுவினர், அதனை எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊன்னுக்கல் (Oonnukal) காவல் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும். இதில் ஏ.கே.சுனில் என்ற தயாரிப்பாளரின் பெயரும் உள்ளது.
குற்றத்தில் ஈடுப்பட்ட பெண்: குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் ஸ்ரேயா என்ற பெண்ணின் பெயரும் இடம்பெற்றுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரேயா, படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணை கடந்த நவம்பர் மாதம் துபாய்க்கு வரவழைத்துள்ளார். இதனையடுத்து அங்குள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மலையாள நடிகர்கள் சித்திக், இடவேள பாபு, கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, மணியம் பிள்ளை ராஜு, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.