புதுச்சுவை புத்தாண்டு: மட்டன் தோசை | Mutton dosa


கிறிஸ்துமஸ்ஸைத் தொடர்ந்து புத்தாண்டு வந்துவிடும். கடந்த ஆண்டில் எதையெல்லாம் செய்ய நினைத்தோமோ அதைச் செய்துமுடித்தோமா இல்லையா என்பதைப் பற்றிய சிந்தனை ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் புத்தாண்டுக்குப் புதிதாக என்ன சமைக்கலாம் என்ற சிந்தனை இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும்.

அந்தச் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகப் புதுப்புது உணவு வகைகளுடன் வந்திருக்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. புத்தாண்டு அன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.

மட்டன் தோசை

என்னென்ன தேவை?

ஆட்டுக் கறி – 200 கிராம் (பொடியாக நறுக்கியது)

தோசை மாவு – தேவையான அளவு

தக்காளி, வெங்காயம் – தலா1

பச்சை மிளகாய் – 2

மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்

மல்லித் தூள், கரம் மசலா – தலா அரை டீஸ்பூன்

சீரகத் தூள் – கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை – சிறிதளவு

கறிவேப்பிலை, மல்லித் தழை – தலா 1 கைப்பிடியளவு

எப்படிச் செய்வது?

சுத்தம் செய்த கறியில் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் ஐந்து விசில் விட்டு இறக்கிக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் தக்காளியையும் சேர்த்து நிறம் மாறும்வரை நன்றாக வதக்குங்கள்.

வேகவைத்த கறியைச் சேர்த்து வதக்கி அதனுடன் மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள், சீரகத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். கிரேவி பதத்துக்குக் கொதித்து வந்ததும் இறக்கிவிடுங்கள். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, தோசையைக் கனமாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசை வெந்ததும் ஒரு கரண்டி கிரேவியைத் தோசை மீது பரவலாக வைத்து மேலே மிளகுத் தூள், மல்லித் தழையைத் தூவி, தோசையைத் திருப்பிப் போடாமல் எடுக்க வேண்டும்.

Source link