அமெரிக்கா: தனது மூத்த மகனின் திருமணத்துக்காக அமெரிக்காவில் இருந்து குடும்பத்துடன் ஜப்பான் புறப்பட்டுள்ளார் நடிகர் நெப்போலியன். இதனை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: அன்பு நண்பர்களே, தமிழ்ச் சொந்தங்களே, Sep 1 அன்று அமெரிக்காவில் நாங்கள் வசிக்கும் Nashville லில் இருந்து எனது குடும்பத்தோடு ஜப்பானுக்கு பயணம் தொடங்கிய போது, நண்பர்கள் எல்லோரும் வந்திருந்து சிறப்பாக வாழ்த்துக்களை அளித்து எங்களை பாசத்தோடு வழியனுப்பி வைத்த மகிழ்வான தருணம். எங்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி. அனைவருக்கும் மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் நெப்போலியன் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அண்மையில் அவரது மூத்த மகன் தனுஷின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டடுள்ளதால், வீடியோ கால் மூலம் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த அக்ஷயாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையடுத்து இருவருக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் குடும்பத்துடன் அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலமாக நெப்போலியன் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.