மும்பை: கடந்த 2017-ம் ஆண்டு மும்பையில் ரூ.20 கோடிக்கு வாங்கிய பங்களாவை நடிகை கங்கனா ரனாவத் தற்போது ரூ.32 கோடிக்கு விற்றுள்ளார்.
மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள பாலி ஹில் தெருவில் நடிகை கங்கனா ரனாவத் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.20 கோடிக்கு புதிய பங்களா ஒன்றை விலைக்கு வாங்கினார். பின் இந்த பங்களாவை தனது தயாரிப்பு நிறுவனமான ‘மணிகர்னிகா பிலிம்ஸ்’ அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். இதற்காக அதன் கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்தார்.
இதனையடுத்து, கடந்த 2020-ம் ஆண்டு கங்கனா ரனாவத்தில் பங்களாவின் சில பகுதிகள் விதி மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறி மும்பை மாநகராட்சி பங்களாவின் விதி மீறிய பகுதிகளை இடிக்க உத்தரவிட்டது. இதற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தை கங்கனா நாட, அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகி கட்டிடத்தை இடிக்க தடை விதிக்கப்பட்டது. அப்போது, மும்பை மாநகராட்சி மீது கங்கனா அப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில், சர்ச்சைகள் அடங்கி இந்த பங்களாவை தற்போது ரூ.32 கோடிக்கு விற்றுள்ளார் கங்கனா. ரூ.3,075 சதுர அடி மற்றும் 565 சதுர அடி பார்க்கிங் ஏரியா கொண்ட பங்களாவை கோயம்புத்தூரைச் சேர்ந்தவரும், கமலினி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குதாரருமான ஸ்வேதா பதிஜா வாங்கியுள்ளார். மேலும், தனது தயாரிப்பு நிறுவன அலுவலகத்துக்காக மும்பையில் அண்மையில் கங்கனா அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.