லப்பர் பந்து விமர்சனம்: அடிச்ச எல்லா பாலுமே சிக்ஸர்தான் - உணர்வுகளை வைத்து ஒரு யதார்த்த கிரிக்கெட்!

லப்பர் பந்து விமர்சனம்: அடிச்ச எல்லா பாலுமே சிக்ஸர்தான் – உணர்வுகளை வைத்து ஒரு யதார்த்த கிரிக்கெட்!


சுவரோவிய கலைஞரான கெத்து (அட்டகத்தி தினேஷ்) ‘முதல் பந்து சாமிக்கு, மத்ததெல்லாம் தனக்கு’ என லப்பர் பந்து போட்டியில் அதிரடி காட்டும் உள்ளூர் சேவாக். ஆனால் அவரது காதல் மனைவிக்கு (ஸ்வாசிகா விஜய்) இவரது விளையாட்டு சகவாசம் அறவே ஆகாது. கெத்தின் ஊருக்கு விளையாட வரும் ‘ஜாலி பிரெண்ட்ஸ்’ அணியினர், அவரது அதிரடியால் தோற்றுப்போகிறார்கள். அந்தப் பாரம்பரிய அணியில் முதல்முறையாக விளையாட வாய்ப்பு கிடைத்தும், பந்து வீச வாய்ப்பு கிடைக்காமல் ஏமாறுகிறார் சிறுவன் அன்பு. ஆனால் காலங்கள் ஓடத் தனக்கென தனி அணி இல்லாவிட்டாலும் ‘யார்க்கர் கிங்’ என்று பெயரெடுக்கிறார் இளைஞன் அன்பு (ஹரீஷ் கல்யாண்). ஊரில் ஜெர்சி கடை வைத்திருக்கும் அன்புக்கு கெத்தின் மகள் (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) மீது காதல். இந்நிலையில் கெத்து, அன்பு ஆகியோருக்கு இருக்கும் கிரிக்கெட் பகையானது தனிப்பட்ட ஈகோ மோதல் ஆகிறது. இந்த மோதல் அவர்கள் இருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள், இதனால் அன்பின் காதல் என்னவாகிறது என்பதைச் சுவாரஸ்யமாகச் சொல்கிறது இந்த ‘லப்பர் பந்து’.

Lubber Pandhu movie review 2 Thedalweb லப்பர் பந்து விமர்சனம்: அடிச்ச எல்லா பாலுமே சிக்ஸர்தான் - உணர்வுகளை வைத்து ஒரு யதார்த்த கிரிக்கெட்!
லப்பர் பந்து விமர்சனம்

‘அட நீ சிங்கக் குட்டி’ என்று ஸ்பீக்கரில் விஜயகாந்த் பாடல் தெறிக்க, கர்சீப்பை பேட்டில் சுற்றிக்கொண்டு வரும் தோரணை, பந்தை எல்லைக்கோட்டுக்கு மேலே பறக்கவிட்டு அசால்டாக நிற்கும் பேட்ஸ்மேனின் உடல்மொழி, அகங்காரம் உள்ளே புகுந்த பின்னர் எழும் ஆக்ரோஷம் எனப் படத்தின் வசனத்தைப் போல ‘இரண்டு தென்னை மரத்துக்கு மேலே சிக்ஸர் அடித்தது’ போல தன் நடிப்பால் விளாசியிருக்கிறார் தினேஷ். குறிப்பாகப் படம் நெடுக கெத்தாக இருப்பவர், மனைவியிடம் குழந்தை போல உடைகிற இடத்தில் பர்ஃபாமன்ஸாகவும் ‘ரியல் கெத்து’ காட்டியிருக்கிறார்.

“சபாஷ் சரியான போட்டி” என்பதாக முடிவு எடுக்க சூப்பர் ஓவர் கேட்கும் அளவுக்கு தன் நடிப்பை யார்க்கராகச் சொருகியிருக்கிறார் ஹரீஷ் கல்யாண். கையை பேட்டாக மாற்றி காற்றில் சுழற்றும் இடத்திலும், யதார்த்தமான காதல் காட்சிகளிலும் ஹார்ட்டின்களை அள்ளியிருக்கிறார். அதே சமயம் ஈகோ வளர்கிற இடத்தில் மற்றொரு நபராக உருமாறுவது, சுற்றிநடக்கும் அரசியலைப் பக்குவமாகக் கையாளுவது என்று நடிப்பிலும் வித்தியாசங்கள் காட்டி ஆல்ரவுண்டராக மிளிர்கிறார். தனக்கென எதுவுமே கேட்க மாட்டேன் என்று காதலை வெளிப்படுத்தும் இடத்திலும், தனது தந்தையா, காதலா என்ற சங்கடமான இடத்திலும் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி “♥️ நான் தான் ♥️” எனப் பெயர் வாங்குகிறார் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி. அவரது தாயாராக நடித்திருக்கும் ஸ்வாசிகா விஜய், பந்தை அரிவாள்மணையில் கீறி வீசுவது, உணர்வுபூர்வமான காட்சிகளில் ஸ்கொர் செய்வதேன மேட்ச் சம்மரியில் இடம்பிடிக்கும் அளவுக்குத் தன் கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார்.

lubber 2 Thedalweb லப்பர் பந்து விமர்சனம்: அடிச்ச எல்லா பாலுமே சிக்ஸர்தான் - உணர்வுகளை வைத்து ஒரு யதார்த்த கிரிக்கெட்!
லப்பர் பந்து விமர்சனம்

எதிரும் புதிருமாக இருக்கும் இரு நாயகர்களின் நண்பர்களாக வரும் பாலா சரவணன் மற்றும் ஜென்சன் திவாகர் வெற்றிகரமான சிரிப்பொலி பார்ட்னர்ஷிப் ஒன்றைப் போட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த கூட்டத்தையே ஒற்றை ஆளாகக் கலாய்க்கும் பாலா சரவணன், காத்தாடியாக மேலே பறக்கிறார் என்றால், தனது உடல்மொழியாலும், நகைச்சுவை பன்ச்களாலும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்திருக்கிறார் ஜென்சன். மாமியாராக கீதா கைலாசம் தன்னை நிரூபிக்க, தனக்குக் கொடுக்கப்பட்ட குறைவான திரை நேரத்தை சூப்பர் ஓவராகக் கருதி கச்சிதமாகப் பயன்படுத்தியது எமோஷனல் டச்! கேப்டனாக வரும் காளி வெங்கட், அவரது மகள் அகிலா, தேவதர்ஷினி, டி.எஸ்.கே என அனைவருமே ஒரு போட்டிக்கு (படத்துக்கு) அனைத்து வீரர்களின் பங்களிப்பும் முக்கியமானது என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

வெயில் கிராமத்தின் வெட்டவெளி, கிரிக்கெட் போட்டியை நேரில் காண்கிறோம் என்கிற உணர்வு ஆகியவற்றைச் சிறப்பான ஒளியுணர்வு, தேர்ந்த கோணங்கள் எனக் கச்சிதமாகப் படமாக்கியுள்ளார் ஒளிப்பதிப்பாளர் தினேஷ் புருஷோத்தமன். இவரது காட்சி சட்டகத்தை வீடுகளில் வரையப்பட்ட சி.எஸ்.கே, கங்குலி, விஜயகாந்த் ஓவியங்கள், கிரிக்கெட் போட்டி நடைபெறும் செட்டப், இறைச்சி வெட்டப்படும் இடம் ஆகியவற்றை வைத்துக் கூடுதல் மெருகேற்றியிருக்கிறார் கலை இயக்குநர் வீரமணி கணேசன். பல்வேறு உணர்வுகளின் குவியல்களாக விரியும் காட்சிகளைச் சிறப்பாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் மதன்.ஜி. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத கிரிக்கெட் மேட்ச் காட்சிகள் இதற்கு ஓர் உதாரணம். ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அழகான மாண்டேஜுகளாக விரிந்திருப்பது கதையை எந்த விதத்திலும் சொந்தரவு செய்யவில்லை. பின்னணி இசையிலும் கதைக்கு என்ன தேவையோ அதைச் செய்து ஃபேர் ப்ளே விருதை வாங்கிக்கொள்கிறார்.

lubber 3 Thedalweb லப்பர் பந்து விமர்சனம்: அடிச்ச எல்லா பாலுமே சிக்ஸர்தான் - உணர்வுகளை வைத்து ஒரு யதார்த்த கிரிக்கெட்!
லப்பர் பந்து விமர்சனம்

ஸ்போர்ட்ஸ் டிராமா என்றவுடன் வெறும் வெற்றி, தோல்வி என்று நின்றுவிடாமல், கிராமத்தைக் களமாக வைத்து அதைச்சுற்றி நடக்கும் அரசியல், சுவரொட்டி, பேனர், ஜெர்சி என உள்ளூர் கிரிக்கெட்டின் உலகை ரசிக்க வைத்திருக்கிறார்கள். கதாபாத்திரங்களை அறிமுகம் செய்த முதல் காட்சியிலிருந்தே விசில் போட வைத்திருப்பது பலமான திரைக்கதைக்கான சாட்சி! சாதாரணமாகப் படத்தின் ஆரம்ப காட்சிக்கும் இறுதி காட்சிக்கும் எளிதாகத் தொடர்பை ஏற்படுத்திவிடலாம். அவ்வகை திரைக்கதை டெம்ப்ளேட் பழக்கப்பட்டதுதான்! ஆனால் வடிவமைத்த கதாபாத்திரங்களைக் கொண்டு, சின்ன சின்ன நிகழ்வுகளை வைத்து ஒவ்வொரு காட்சிக்குமே தொடர்பினை உண்டாக்குவது சற்றே கடினமான காரியம். பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் அதை நேர்த்தியாகச் செய்து முடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.

இரு ஆண்களுக்குள் நடக்கும் அகங்கார சண்டைதான் கதையின் மையச்சரடு… என்றாலும் அதில் பெண்களின் உலகை, அவர்களின் உணர்வை, அவர்களின் நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்திய விதத்திற்குப் பாராட்டுகள். “சாதி திமிரா ஆம்பள திமிரா”, “அது என்ன தம்பி மாதிரி”, “எனக்கும் எஸ்.சி நண்பன் இருக்கான்னு சொல்றது கேவலம் தெரியுமா” போன்ற வசனங்கள் சாதியம் மற்றும் ஆணாதிக்கத்தின் மீது எறியப்பட்ட ‘நச்’ பவுன்சர்கள். அது வலிந்து திணிக்கப்படாமல் கதையின் போக்கோடு இணைக்கப்பட்ட விதமும் அட்டகாசம். அதேபோல கிரிக்கெட் வர்ணனை வசனங்கள் ‘கலகல’. ‘நீ பொட்டு வச்ச’, ‘ஆடுங்கடா’ போன்ற பாடல்களைப் பயன்படுத்திய விதத்தில் கூடுதல் கரகோஷங்களைப் பெறுகிறார்கள். ஆனால், அதேவேளையில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள காணொலியை நகைப்புக்காகப் பயன்படுத்தியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இத்தனை ஆரவாரத்திற்கு மத்தியில் நிதானமான அந்த க்ளைமாக்ஸ், சிறிது சமரசங்கள் இருப்பினும் இயக்குநரின் சமூகப் பொறுப்பை உணர்த்தி ‘ஆட்டநாயகன்’ விருதுக்கு அடிபோடுகிறது.

Lubber Pandhu Thedalweb லப்பர் பந்து விமர்சனம்: அடிச்ச எல்லா பாலுமே சிக்ஸர்தான் - உணர்வுகளை வைத்து ஒரு யதார்த்த கிரிக்கெட்!
லப்பர் பந்து விமர்சனம்

மொத்தத்தில் சிறப்பான திரைக்கதை, தேர்ந்த நடிப்பு, தெளிவான அரசியல் எனத் திரையை அலங்கரித்திருக்கும் இந்த ‘லப்பர் பந்து’, வெற்றிக் கோப்பைக்காக எல்லையைத் தாண்டி அடிக்கப்பட்ட ஹெலிகாப்டர் ஷாட்!



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *