விஜய்க்காக எழுதிய கதையில் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘கோட்’ படத்தினை முடித்துவிட்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இது விஜய்யின் 69-வது படமாகும். இந்தப் படத்தில் ஹெச்.வினோத் ஒப்பந்தம் ஆவதற்கு முன்பு பல்வேறு இயக்குநர்கள் விஜய்யை சந்தித்து கதை கூறி வந்தார்கள். அதில் ஆர்.ஜே.பாலாஜியும் ஒருவர்.
இதனை ஆர்.ஜே.பாலாஜியே மறைமுகமாக உறுதிப்படுத்தினார். இவருடைய கதை நன்றாக இருந்தாலும், கடைசி படமாக வேண்டாம் என்று கூறிவிட்டார் விஜய். பின்பு அந்தக் கதையில் சில மாற்றங்கள் செய்து ‘மாசாணி அம்மன்’ என்ற பெயரில் த்ரிஷாவை வைத்து இயக்க முடிவு செய்தார்.
தற்போது விஜய்க்காக எழுதிய கதையினை சூர்யாவை சந்தித்து கூறியிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. அந்தக் கதையினைக் கேட்டுவிட்டு, சில மாற்றங்கள் மட்டும் செய்யச் சொல்லி ஓகே செய்துள்ளார் சூர்யா. இதனால் மகிழ்ச்சியான ஆர்.ஜே.பாலாஜி, தற்போது சூர்யா சொன்ன மாற்றங்களை எழுதி வருகிறார்.
விரைவில் இறுதிக்கட்ட கதை விவாதம் நடைபெறவுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, உடனடியாக ஆர்.ஜே.பாலாஜி படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் சூர்யா. இதனை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தான், வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார் சூர்யா.