‘தி கோட்’ படத்தில் விஜய் – தோனி இருவரையும் ஒரு காட்சியில் நடிக்க வைக்க திட்டமிட்டு நடைபெறாமல் போயிருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தி கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். ‘தி கோட்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் மேட்சில் நடைபெறுவது போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இந்தக் காட்சிகளின் பின்னணியின் வரும் கிரிக்கெட் வர்ணனை முழுக்கவே பத்ரிநாத் செய்திருந்தார். இதற்கு அவருக்கு நன்றி தெரிவித்திருந்தது படக்குழு. தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
படத்தில் வரும் ஐபிஎல் மேட்சில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் காட்சிகள் இடம்பெறும். இதில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனியை நடிக்க வைக்க அணுகியிருக்கிறார்கள்.
தோனி களமிறங்கும் முன் விஜய் அவரை சந்தித்து இறுதிப் போட்டிக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்று காட்சியை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக தோனி ஏற்கெனவே தேதிகள் கொடுத்துவிட்டதால் நடிக்க இயலாமல் போயிருக்கிறது.
‘தி கோட்’ படப்பிடிப்புக்கு இடையே விஜய்யும் “தோனியிடம் இருந்து பதில் வந்துவிட்டதா?” என்று இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அடிக்கடி கேட்டிருக்கிறார். இறுதியில் தோனியிடம் தேதிகள் கிடைக்காத காரணத்தினால் காட்சியமைப்பில் சிறு மாற்றம் செய்து உருவாக்கி இருக்கிறார்கள்.