மதுரை: நடிகர் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு பேனர்கள், ஸ்பீக்கர்கள் கட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் கருவேலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லெப்ட் பாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “நடிகர் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் நாளை (செப். 5) வெளியாகிறது. இதற்காக பெரியகுளம் பாவலர், பார்வதி மற்றும் லக்கி தியேட்டர்கள் முன்பு பிளக்ஸ் பேனர்கள், ஸ்பீக்கர்கள் வைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதி கோரி போலீஸாரிடம் ஆகஸ்ட் 22-ல் மனு அளித்தோம். இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, ‘தி கோட்’ திரைப்படம் வெளியாகும் தியேட்டர்கள் முன்பு பிளக்ஸ் பேனர்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே.முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மனுதாரர் போலீஸாரிடம் அனுமதி பெறாமல், சம்மந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பிளக்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, “மனுதாரர் நகராட்சி நிர்வாகத்தை அணுகி உரிய அனுமதி பெறலாம்” என உத்தரவிட்டார்.