சென்னை: விஜய்யின் 69-வது படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் பாபி தியோல் தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 69-வது படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத். இந்தப் படத்தில் விஜய்யுடன் சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், எடிட்டராக பிரதீப்.இ.ராகவ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் முதற்கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.
முழுநேர அரசியலுக்குள் நுழையும் முன் விஜய் நடிக்கவுள்ள கடைசி படம் இது என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. விரைவில் பட பூஜை நடத்தி படப்பிடிப்பு தொடங்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் பணிகளை முடிக்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அதற்கு தகுந்தாற் போல் படக்குழுவினரும் பணிகளை விரைந்து முடிக்க பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். முன்னதாக ‘அனிமல்’ படத்தில் தன்னுடைய நடிப்பால் பாபிதியோல் பரவலான கவனத்தை ஈர்த்தார். மேலும் இன்று (செப்.14) மாலை 5 மணிக்கு ‘விஜய்69’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.