‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழாவில் டிக்கெட்கள் சர்ச்சையானது தொடர்பாக ரஜினி பதிலளித்துள்ளார். தா.செ.ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரஜினி, ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 20-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் டிக்கெட் சர்ச்சை உருவானது. நிஜ டிக்கெட்கள் வைத்திருந்த பலரும் உள்ளே செல்ல முடியாமல் இருந்தார்கள். ஏனென்றால் உள்ளே அரங்கம் நிறைந்துவிட்டது என காவல் துறையினர் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனை வைத்து பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வந்தார்கள். இது தொடர்பாக ரஜினி, “வேட்டையன் படத்தின் மக்கள் மற்றும் ரசிகர்கள் பார்த்துவிட்டு எப்படியிருக்கிறது என்று சொல்ல வேண்டும். இசை வெளியீட்டு விழாவில் டிக்கெட்கள் தொடர்பான விஷயங்கள் பார்த்தேன். அடுத்த முறை அவ்வாறு நடக்காமல் பார்க்க வேண்டும்.
‘வேட்டையன்’ படத்தில் நிறைய பெரிய நடிகர்களை உள்ளே கொண்டு வந்தது தமிழ்க்குமரன் தான். தேதிகள் எல்லாம் சரிபார்த்து, இயக்குநர் கேட்ட இடத்தில் படப்பிடிப்பு நடத்திக் கொடுத்தார். ‘மனசிலாயோ’ பாடல் வெற்றியடைந்தற்கு காரணம் அனிருத், நடன இயக்குநர் தினேஷ், பாடலாசிரியர் சூப்பர் சுப்பு, பாடகர்கள் அனிருத், யுகேந்திரன், தீப்தி சுரேஷ் ஆகியோர் தான். தினேஷ் மாஸ்டரை எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன சின்ன நடன அசைவுகள் மூலம் அற்புதமாக செய்துக் கொடுத்தார்” என்று தெரிவித்துள்ளார்.