சென்னை: புதிய சிம்பொனி ஒன்றை எழுத இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
லண்டனில் கடந்த மார்ச் 8-ம் தேதி ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் பாரம்பரிய சிம்பொனி இசையை அங்குள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்தார் இளையராஜா. உலகின் மிகச் சிறந்த ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து அவர் இதை அரங்கேற்றினார்.
அவரது இசைக் குறிப்புகளை நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பல்வேறு இசைக் கருவிகளில் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதன்மூலம், ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை இளையராஜா படைத்தார். இசை ஜாம்பவான்கள் மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய சிம்பொனி இசைக் கலைஞர்கள் வரிசையில் இளையராஜாவும் இணைந்தார்.
இந்த நிலையில் தனது புதிய சிம்பொனி இசை குறித்த அறிவிப்பை இளையராஜா வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தீபாவளி நாளில் ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். எனது அடுத்த சிம்பொனியை எழுத இருக்கிறேன். அத்துடன் புதிய படைப்பாக சிம்பொனி டான்சர்ஸ் என்ற புதிய இசைக் கோர்வையை எழுத இருக்கிறேன். இதை உங்களுக்கு தீபாவளி நற்செய்தியாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.