‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை எம்.ஜி.ஆர் வெளிநாடுகளில் படமாக்கிய போது அதற்கு உதவியவர் எழுத்தாளர் மணியன். இதனால், எம்.ஜி. ஆருக்கு நெருக்கமானார். அதே போல் வித்துவான் வே லட்சுமணனும் அவருக்கு நெருக்கமாக இருந்தார். இவர்கள் இருவருக்கும் உதவ வேண்டும் என்பதற்காக, தயாரிப்பாளர் ஆக்கினார், எம்.ஜி.ஆர். இதற்காக அவர்கள் உருவாக்கிய நிறுவனம், உதயம் புரொடக்ஷன்ஸ். இதன் லோகோ டிசைனை எம்.ஜி.ஆரே வடிவமைத்து 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தார். அவை ‘இதயவீணை’, ‘சிரித்து வாழவேண்டும்’, ‘பல்லாண்டு வாழ்க’. இதில் விகடனில் மணியன் எழுதிய நாவல்தான் ‘இதய வீணை’ என்ற பெயரில் படமானது.
சிறு வயதிலேயே பெற்றோரால் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் சுந்தரம், காஷ்மீர் சென்று சுற்றுலா வழிகாட்டியாக மாறுகிறார். அங்கு சுற்றுலா வரும் கல்லூரி மாணவிகளிடையே தனது தங்கை நளினியைச் சந்திக்கிறார். அண்ணன் என்பது தெரியாமலேயே அவருக்கு உதவுகிறார். பிறகு மாணவிகளுடன் சென்னை திரும்புகிறார். தங்கை நளினி, கிரியை காதலிப்பதை அறிந்து அவர்களின் திருமணத்துக்கு உதவும் சுந்தரத்துக்கும் நளினியின் தோழி விமலாவுக்கும் காதல் வருகிறது. இதற்கிடையில் அங்கு ஏற்படும் சிக்கல்களை சமாளித்து, ‘உங்க வாயாலேயே நீதான் என் மகன்னு சொல்ல வைக்கிறேன்’ என்று அப்பாவிடம் போட்ட சபதத்தை எப்படி நிரூபிக்கிறார் என்பது கதை.
எம்.ஜி.ஆர், சுந்தரமாக நடித்தார். லட்சுமி, மஞ்சுளா, நம்பியார், ஏ.சகுந்தலா, எம்.ஜி.சக்கரபாணி, ஆர்.எஸ்.மனோகர், தேங்காய் சீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன், சச்சு என பலர் நடித்தனர். கிருஷ்ணன்- பஞ்சு இயக்கிய இந்தப் படத்துக்கு, சொர்ணம் அரசியல் டச்சோடு அட்டகாசமான வசனங்களை எழுதினார். அந்த காலகட்டத்துக்குப் பொருத்தமான அந்த வசனங்கள் ரசிக்கப்பட்டன. சங்கர்- கணேஷ் இசை அமைத்தனர். பாடல்களை வாலி, புலமைப்பித்தன் எழுதினர். ‘காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்’, ‘ஆனந்தம் இன்று ஆரம்பம்’, ‘திருநிறைச்செல்வி மங்கையர்க்கரசி’ , ‘பொன் அந்தி மாலைப் பொழுது’ ஆகிய பாடல்கள் பெரும் ஹிட்டாகின. இப்போதும் பலரின் விருப்பப் பாடல்களாக இவை இருக்கின்றன. இசை அமைப்பாளர்கள் சங்கர்- கணேஷுக்கு இந்தப் படம் பெரும் புகழைக் கொடுத்தது.
இப்படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தவர், அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி. ஆனால், ‘இதய வீணை’ படம் 72-ம் ஆண்டு இதே தேதியில் (அக். 20) வெளிவந்த போது எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்திருந்தார். அவர் கட்சி ஆரம்பித்த பின் வெளியான முதல் படம் இது. டைட்டிலில் ‘பாரத்’ புரட்சி நடிகர் எம்ஜிஆர் என்று போட்டிருப்பார்கள். கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்கு, பின்னணி இசையாக வீணையை பயன்படுத்தி இருந்தது புதுமையாக இருந்தது. 30 வீணைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இசையை அக்காட்சியில் சேர்த்தனர்.
படத்தின் பெரும்பகுதிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டன. ஏ சண்முகம் ஒளிப்பதிவில் காஷ்மீரின் குளுகுளு அழகை அப்படியே அள்ளி வந்தது போல இருந்தன காட்சிகள். அதிமுகவை தொடங்கிய எம். ஜி.ஆருக்கு, ரசிகர்கள், மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கைக் காட்டிய படம் இது.