முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தெலுங்கில் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘எல்லம்மா’. இப்படத்தில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தாலும், அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை. தற்போது ‘எல்லம்மா’ கதையில் தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதற்காக முழுமையாக தனது உடலமைப்பை மாற்றி வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
தெலுங்கில் ‘பாலகம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வேணு எல்டண்டி. அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். தற்போது அதில் தேவி ஸ்ரீபிரசாத் நடிக்கவிருப்பதாக தெரிகிறது. பல்வேறு முன்னணி படங்களுக்கு இசையமைத்து வந்தாலும், நடிக்க ஆசையிருப்பதை சில பேட்டிகளில் தேவி ஸ்ரீபிரசாத் வெளிப்படுத்தி இருக்கிறார்.
தமிழில் ‘சச்சின்’, ‘மாயாவி’, ‘ஆறு’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்தவர் தேவி ஸ்ரீபிரசாத். தெலுங்கில் ‘புஷ்பா’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.