மும்பை: பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான கோவர்தன் அஸ்ரானி காலமானார். அவருக்கு வயது 84. அவர் அஸ்ரானி என சினிமா ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார்.
திங்கட்கிழமை (அக்.20) அன்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். இதை அவரது மேலாளர் உறுதி செய்தார். சினிமா உலகில் சுமார் 5 தசாப்தங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஆறு படங்களை இயக்கி உள்ளார். சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
‘சோலே’ படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத பாத்திரமாக அமைந்துள்ளது. அதை ரசிகர்கள் இன்றும் கொண்டாடுவது உண்டு. நகைச்சுவை, குணச்சித்திரம் உள்ளிட்ட பல்வேறு பாத்திரங்களை ஏற்று அவர் நடித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சுவாசம் சார்ந்த உடல்நல பிரச்சினை காரணமாக ஜூஹூவில் உள்ள பாரதிய ஆரோக்கிய நிதி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், திங்கட்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் அவர் உயிரிழந்துள்ளார். நுரையீரலில் நீர் கோர்த்த காரணத்தால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது கடைசி ஆசைப்படி அவர் உயிரிழந்ததை பொதுவெளியில் அறிவிக்காமல் அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அஞ்சலி செலுத்தினர். மேலும், அவருக்கான இறுதி சடங்குகள் திங்கட்கிழமை அன்றே நடைபெற்றுள்ளது. அதன் பின்னர்தான் அவரது மறைவு செய்தியை உறவினர்கள் பொதுவெளியில் பகிர்ந்தனர்.