பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவி உருவாகும் ‘அங்கம்மாள்’ | Angammal adapted from a short story

பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவியே ‘அங்கம்மாள்’ படம் உருவாகி வருகிறது.
ஸ்டோர் பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃபிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவை இணைந்து தயாரித்து வரும் படம் ‘அங்கம்மாள்’. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வரவேற்பைப் பெற்றது. இப்படம் புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கி வருகிறது படக்குழு.
இது குறித்து கூறிய பெருமாள் முருகன், “இந்தப் படத்தின் கதை என்னுடையது என்றாலும் இதற்கான தழுவல் உரிமையை கொடுத்ததோடு என் பங்கு முடிந்துவிட்டது. இதன் பிறகு, இந்தக் கதையை முழுமையாகப் புரிந்து கொண்டு படமாகக் கொண்டு வந்ததில்தான் இயக்குநரின் திறமை உள்ளது. சிறுகதை சினிமாவாக மாறும்போது அதில் பல விஷயங்கள் மாறலாம். குறிப்பாக இந்தக் கதையில் கிளைமாக்ஸ் மற்றும் பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்துவதை சொல்லலாம். 25 நிமிடங்கள் நீளம் கொண்டு குறும்படத்திற்கான கதையை முழுநீள படமாக நேர்த்தியுடனும் ஆழத்துடனும் இயக்குநர் மாற்றியிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
’அங்கம்மாள்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். மேலும் சரண், பரணி, முல்லையரசி மற்றும் தென்றல் ரகுநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதற்கு ஒளிப்பதிவாளராக அஞ்சோய் சாமுவேல், இசையமைப்பாளராக முகமது மக்பூல் மன்சூர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
