“ரோபோ சங்கர் அன்று முழுவதும் அப்படியேதான் தான் இருந்தார்” – நடிகர் ரவி மரியா | Actor Ravi Mariya fondly remembers a day spent on a movie set with the late Robo Shankar
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவு திரையுலகை வருத்தமுறச் செய்திருக்கிறது. இத்தனை இளம் வயதில் அவரின் இழப்பு அத்தனை பேரையும் துன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இயக்குநர் எழிலின் `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் ‘அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும்’ காமெடி எவர்கிரீன் காமெடி என்றே சொல்லலாம்.
அதில், நடிகர் ரோபோ சங்கருக்கும், நடிகர் ரவி மரியாவுக்கும் நடிகர் சூரிக்கும் இடையில் நடக்கும் நடிப்பு போட்டியில் காமெடி காட்சி வெற்றிப் பெற்றுவிடும்.
மிகவும் ரசித்துப் பார்க்கப்பட்ட அந்த காமெடி காட்சியில் நடித்த நடிகர் ரவி மரியா, ரோபோ சங்கரின் மறைவையொட்டி வருத்தத்தில் இருந்தார். அவரிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.

ஒரே ஊர்காரர்:
“ரோபோ சங்கர்… இப்போ நினைத்தாலும் மனது பாரமாக இருக்கிறது. என்னை அவர் சக நடிகராகவே நடத்தியதில்லை. எப்போதும் சகோதரனாக அண்ணா அண்ணா என்றே அழைப்பார்.
இருவரும் மதுரைகாரர்கள்தான் என்பதால் ஊர்பாசமும் அதில் கலந்திருக்கும். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் எங்களுடைய காமெடி காம்போ அவ்வளவு ஹிட் அடித்தது.
அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும் என அவர் தொடங்கும்போதே ரசிகர்கள் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
அந்தப் படத்தில் அவர் மனநலம் பாதிகப்பட்டவராக நடித்திருப்பார், ஞாபக மறதிக்காரராக நடித்திருப்பார்.
