‘வர்மா’ மற்றும் ‘ஆதித்யா வர்மா’ படங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் துருவ் விக்ரம்.
தமிழகத்தில் ‘பைசன்: காளமாடன்’ படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இப்படத்தினை தெலுங்கில் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், நிவாஸ் கே.பிரசன்னா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் வாரிசு நடிகர் என்பதால் வாய்ப்பா என்ற கேள்விக்கு துருவ் விக்ரம், “நான் ஒரு நட்சத்திரக் குழந்தை என்பது உண்மைதான். எனக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், மக்கள் என்னை ஏற்றுக் கொள்ளவும், நேசிக்கவும், இந்திய சினிமாவில் ஒரு இடத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராகவே இருக்கிறேன். அதுவரை தொடர்ந்து பணிபுரிவேன்” என்று பதிலளித்துள்ளார்.
மேலும், ’வர்மா’ மற்றும் ‘ஆதித்யா வர்மா’ ஆகிய படங்கள் வெளியீடு குறித்த கேள்விக்கு, “அது நான் கடந்து செல்ல விரும்பும் ஒன்று. ஆனால், திரும்பிப் பார்த்தால் அது என் பயணத்தின் ஒரு பகுதி. அதை ஏற்றுக் கொள்கிறேன். இன்று உங்களுடன் பேசும் நபராக வளரவே அது உதவியது என்று நினைக்கிறேன். எனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை” என்று துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்.
பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க ‘வர்மா’ உருவானது. அந்த படம் திருப்தியாக வரவில்லை என்பதால், அதனை கைவிட்டு மீண்டும் ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தினை கிரிசாயா இயக்கத்தில் உருவாக்கினார்கள். இதில் ‘ஆதித்ய வர்மா’ திரையரங்குகளில் வெளியாகி பெரும் தோல்வியை தழுவியது. மேலும், ‘வர்மா’ படமும் ஓடிடியில் வெளியிடப்பட்டு கடும் விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.