ஆடியோ லாஞ்ச் விழாவுக்கு வந்திருந்தேன். தேங்ஸ் மீட் நடந்தபோது நான் ஊர்ல இருந்தேன். படம் ரிலீஸ் ஆனப்போ எனக்கு இரண்டு நாள் ஷூட் இருந்தது. ஷூட் முடிச்சுட்டு, படத்தைக் குடும்பத்தோட பார்க்கலாம்னு இருந்தேன். நான் இப்படியொரு படம் பண்றேன், சினிமாவுல நடிக்கிறேன்னு வீட்ல யாருகிட்டயும் அதுவரை சொல்லல. ஊருக்குப் போனதும், ‘கிளம்புங்க, வெளிய போகணும்’னு வீட்ல சொன்னேன். சகோதரி திருமணமானவங்க, அவங்களையும் கால் பண்ணி வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தேன். வீட்டுக்கு வந்த உடனே பரபரப்பா கிளம்பச் சொன்னதைப் பார்த்து அம்மா அப்பா எல்லாம் ரொம்ப பயப்பட ஆரம்பிச்சாங்க. சகோதரி வேற ஊர்லயிருந்து வந்திருக்காங்க. ‘என்ன ஆச்சு’னு எல்லாரும் சிந்தனையில இருந்தாங்க. நான், ‘கிளம்புங்க, ஒரு இடத்துக்கு போகணும்’னு கொஞ்சம் சீரியஸாதான் சொன்னேன். எல்லாருக்கும் விஷயம் தெரியாததால, ‘பையன் ஏதோவொரு பொண்ணை லவ் பண்ணிருப்பான் போல. அவங்க வீட்ல ஏதோ பிரச்சினைனு நம்மளக் கூட்டிட்டு போறான் போல’னு கற்பனையில நல்ல டிப் டாப்பா கிளம்பி வந்தாங்க.
11 மணி ஷோவுக்கு 10.30 மணிக்கு வீட்ல இருந்து கிளம்பி போனோம். ‘எங்கயோ வெளிய போகணும்னு சொல்லிட்டு தியேட்டருக்கு கூட்டிட்டு வந்துருக்கான்’னு கேட்டாங்க. ‘படம் நல்லா இருக்கும்னு சொன்னாங்க, அதான் பாத்துட்டு போலாம்’னு சொன்னேன்.
‘சரி’னு சொல்லிட்டு எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து படம் பார்த்தோம். படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் அப்புறம்தான் நம்ம கேரக்டர் வரும். குடும்பத்தினர் எல்லாரும் அதுவரை படத்தை நார்மலா பாத்துட்டு இருந்தாங்க. நம்ம கேரக்டர் வந்த அப்புறம், ‘ஏய், ஏய், இதுக்குத்தான் கூட்டிட்டு வந்தியா’னு ரொம்ப ஹாப்பியாகிட்டாங்க. இன்டர்வல் வந்த உடனே எல்லாரும் கட்டிப்பிடிச்சு அழுது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாங்க.
தியேட்டருக்கு வந்த எல்லாரும், ‘என்ன, இப்படி அழுதுட்டு இருக்காங்க’னு எட்டிப்பார்க்க வந்தாங்க. அப்புறம் நான் தான்னு பார்த்துட்டு, படத்துல நடிச்சிருந்ததை வச்சு அடையாளப்படுத்திப் பேசினாங்க. ‘நம்ம ஊர்ல இருந்து ஒரு பையன் அங்க வரை போயிருக்கான்’னு மகிழ்ச்சியானாங்க.
சிலர், ‘சினிமாக்காரங்க சென்னையில மட்டும்தான் இருப்பாங்க’னு நினைச்சுட்டு, ‘நீங்க என்ன இங்க இருக்கீங்க’னு கேட்டாங்க. ‘நம்ம ஊரு தியேட்டருக்கு வராம எப்படி’னு சொன்னேன். அந்த அனுபவமெல்லாம் நல்லா இருந்தது.