ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் இணைந்து நடித்துள்ள படம், ‘ஆண்பாவம் பொல்லாதது’. இதை அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். ஆண்கள் படும் கஷ்டத்தைப் பற்றி பேசும் படமாக உருவாகியுள்ள இதை டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெடிகாரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்துள்ளார்.
சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்துக்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, ஈரோடு எக்ஸெல் கல்லூரியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட, 8 ஆயிரம் மாணவர்கள், தங்கள் சமூக ஊடக கணக்குகளில் இதன் டிரெய்லரை வெளியிட்டனர். இதன் மூலம், ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் வெளியிட்ட டிரெய்லர் என்ற உலக சாதனையை படைத்துள்ளது.
‘நான் வளர்ந்த ஊரில் இவ்வளவு பிரம்மாண்டமாக என் படத்தின் நிகழ்வு நடந்தது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார் ரியோ ராஜ். விழாவில், இணை தயாரிப்பாளர் விஜயன் , கதாநாயகி மாளவிகா மனோஜ், நடிகர் விக்னேஷ்காந்த் , இயக்குநர் கலையரசன் , டிரம்ஸ்டிக்ஸ் மணிகண்டன், விவேக் என பலர் கலந்துகொண்டனர். இந்தப் படம், அக். 31-ல் வெளியாகிறது.