தோழியின் கரிசனம், அம்மாவின் பார்வையில் அவரை உணர்ந்து அன்பைப் பகிரும் இடம், பூனையைக் காணாமல் தேடும்போது உணரும் முன்னாள் காதலனின் கரிசனம், பள்ளிப் பருவக் காதலனின் மீள்வருகையின்போது உண்டாகும் பட்டாம்பூச்சி படப்படப்பு என சாவகாசமாக அமர்ந்து பார்த்தால் வெளிப்படும் டிராமாக்கள் மெல்லிசையை மீட்டுகின்றன. பாட்டி இறப்புக்குப் பின் அவரை முதிய தலைமுறை கொண்டாடுவதும், இளைய தலைமுறை தூற்றுவதும் சுவாரஸ்ய நகைமுரண்!
அதே சமயம், நிஜமாகவே ரம்யா விரும்புவது என்ன, படம் எதை நோக்கி செல்கிறது என்பதில் போதிய தெளிவில்லை. நாயகியும் தனக்கு வரும் அனைத்து பிரச்னைகளையும் லெஃப்ட்டில் டீல் செய்வதால் எமோஷனலாக அவரின் பரிதவிப்பு நமக்கு ஒட்டமாட்டேன் என்கிறது. அதேபோல பெண் சுதந்திரம் என்பது தனியொரு கூடு மட்டுமா என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. மொத்தமாகவே படத்தின் எடிட்டிங்கில் நிறைய சென்சார் வெட்டுக்கள் இருப்பது, துருத்திக்கொண்டு தெரிவது படம் பார்க்கும் அனுபவத்தைப் பாதிக்கிறது!
குறைகள் இருப்பினும், பெண்ணின் அகவுணர்வை, “சென்சார்” செய்யாமல் நமக்குக் கடத்தும் ‘பேட் கேர்ள்’க்கு ‘குட் கேர்ள்’ பட்டம் கொடுக்கலாம்.