அந்த ‘ஏறுமுகம்’ல அஜித்திற்கு வட சென்னைக்காரர் கெட்டப் ஒண்ணு வச்சிருந்தோம். அதுல அஜித் தன் கழுத்து நிறைய செயின் போட்டுகிட்டு அதுல ‘6’னு ஒரு டாலர் வச்சிருப்பார். வேட்டி, சட்டை, லுக் எல்லாமே அவரது கெட்டப்பை ரசிச்சு ரசிச்சு வடிவமைச்சது அஜித் தான்.

அந்த ‘ஏறுமுக’ கெட்டப்பை மனசுல வச்சு, மும்பையில் நடக்கற கதையை சென்னையில் நடக்கற கதையாகவும், அஜித்தை தூத்துக்குடி குருவாக (தல) மாத்தினோம். படப்பிடிப்பையும் சென்னையில்தான் நடத்தினோம். டிரைவிங் ஸ்கூல், தூத்துக்குடி போலீஸ் ஸ்டேஷன் எனச் சகலத்தையும் சாந்தோம் பகுதியில்தான் செட் போட்டு படமாக்கினோம்.
இந்தப் படத்துக்கு முன்னர் நான் ‘ஜேஜே’ படத்தின் வேலைகளும் போய்க்கிட்டிருந்தது. ‘ஜேஜே’யில் எனக்கு ஹீரோயின் பூஜாவைச் சிபாரிசு செய்தது ஷாலுதான் (ஷாலினி அஜித்). அதனால பூஜாவை இதிலும் கமிட் செய்தோம். என்னொட முந்தைய படங்கள்ல ஒரே ஹீரோயின் இரண்டு படங்கள்ல நடிச்சது கிடையாது.
‘ஏறுமுகம்’ல படமாக்கின பாட்டை இதுல பயன்படுத்தலாம்னு நினைத்தோம். ஆனா, தூத்துக்குடி குரு தோற்றமும், ‘ஏறுமுகம்’ லுக்கும் வேறவேற என்பதால், அதற்குப் பதிலாக ‘தெற்குச் சீமையில என்னைப் பத்தி கேளு…’ பாடலைக் கொண்டு வந்தோம். இன்னொரு கெட்டப் ஜீவாவும் புத்திசாலியான கேரக்டர் என்பதால் அந்தக் கெட்டப்பும் பேசப்பட்டது. ‘தலை போல வருமா’ வரியை நான் எழுதினேன். மற்ற வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார்.

படத்துல மறக்க முடியாத விஷயம் ஒண்ணு. ருமேனியாவில் ரெண்டு பாடல்களைப் படமாக்கினோம். 8 நாட்கள் திட்டமிட்டு, ஒரு நாள் முன்னதாகவே எடுத்து முடித்துவிட்டோம். படம் தீபாவளி வெளியீடு என அறிவித்துவிட்டதால், உடனே சென்னைக்கு வந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளைத் தொடங்குங்க வேண்டிய சூழல். அதனால என்னையும் கல்யாண் மாஸ்டரையும் அஜித் அவரோட காசுல துபாய் வழியாக சென்னை வரும் விமானத்துல பிஸினஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்து அனுப்பி வச்சிட்டார்.