காமெடியில் தமிழ் சினிமாவில் தான் நிறைய நடிகர்கள் இருக்காங்க . மற்ற மொழிகளில் அவ்வளவாக இல்லை. அந்த வகையில் தனித்து தன் ஸ்டைலில் காமெடியில் கலக்கிய ரோபோவின் மறைவை கேட்டதும் பகீர் என்கிறது.
நான் கதை எழுதும் போது ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டிரண்டு பேரை மனதில் வைத்திருப்பேன். ஆனால் ரோபோ செய்யும் கேரக்டருக்கு அவரைத் தவிர வேறு யாரையும் என்னால் யோசிக்க முடியாது.
இதற்கு முன்னால் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது உடம்பைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி கண்டித்தேன்.

பிறகு உடல் நலம் தேறி வந்ததும் எனக்கு போன் பண்ணி அண்ணே எல்லோரும் அவ்வளவுதான்னு முடிவு பண்ணிட்டாங்க. எமனிடம் கைகுலுக்கி நலம் விசாரித்துவிட்டு திரும்ப வந்திட்டேன்.
உங்களையெல்லாம் விட்டுப் பிரிய மனம் இல்லைண்ணா. இனி அடுத்த ரவுண்டு வருவோம்ணே என நம்பிக்கையோடு சொன்னார்.
எனக்கு அவரிடம் இருக்கிற நகைச்சுவையைத் தவிர்த்து பிடித்த விஷயம் என்னன்னா அவர் எல்லோரிடமும் நட்பு பாராட்டும் அழகு.
நிறைய நண்பர்கள். அவரவர்களுக்கான அன்பை ஒவ்வொரு வார்த்தையிலும் கொட்டுவார். சக கலைஞர் நன்றாக நடித்துவிட்டால் சந்தோஷமாக பாராட்டுவார்.
அவரது பூத உடலைப் பார்க்க நடிகர்களும், நடிகைகளும், இயக்குநர்களும், மக்களுமாக எக்கச்சக்கமாகக் கூடுகிற கூட்டமே இதற்குச் சான்று.