‘வாழ்க்கை கற்றுக்கொடுத்தவற்றிலிருந்து இலக்கியம், ஓவியம், நடனம், நாடகம், சினிமா ஆகியவற்றைப் படைப்பவனே நேர்மையான கலைஞன். அவனது கற்பனை உண்மைக்கு நெருக்கமானது’ என்று சொன்னவர் இயக்குநர், எழுத்தாளர், நடிகர் குரு தத். இதை அவர் தனது சொந்த வாழ்க்கையிலிருந்துதான் சொல்லியிருக்க முடியும். ஏனென்றால், அவர் வாழ்க்கையையும் தன்னுடைய திரைப்படங்களையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க விரும்பாத படைப்பாளி. பாலிவுட்டுக்கு ஒரு சிறந்த பொற்காலத்தை 50 மற்றும் 60களில் தன்னுடைய அற்புதமான படைப்புகளின் வழியாகச் சிருஷ்டித்தவர். அடிப்படையில் சிறுகதை எழுத்தாளராகவும் கவிஞராகவும் இருந்ததால் இந்தி சினிமாவின் திரைமொழிக்குத் திசை வழியைக் காட்டியவர். சினிமா என்பது காட்சிமொழிக்குள் இயங்கும் இலக்கியம் என எண்ணியவர்!
காட்சிமொழியே சினிமா, ஒளியும் நிழலும் இணைந்து முயங்கும் ஒளிப்பதிவும் காட்சிக் கோணங்களும் கதை சொல்வதற்கான முதன்மைக் கருவி என்பதை வெகுஜன சினிமா தளத்தில் எடுத்துக்காட்டிய இந்தித் திரைப்பட க(வி)லைஞன். குரு தத் படச்சுருள் வழியாகச் சிருஷ்டித்த ஒவ்வொரு ஷாட்டும் சிறந்த கவிதை போலக் கைவரப் பெற்றிருக்கும். முதன்மைக் கதாபாத்திரங்களுக்கான குளோஸ் அப் ஷாட்களில் துலங்கும் கண்களில், அவற்றின் கடந்த காலம் தக்க வைத்திருக்கும் நினைவுகளின் மகிழ்ச்சியும், அது பின்னர் உருவாக்கிச் சென்ற இழப்பின் வலியும் நிரந்தரத் தடயமாக ஒளிரும்.
அவருடைய படைப்புகள் சோகமும் கவிதைத் தன்மையும் சமூக விமர்சனமும் ஒருசேரக் கலந்த ஒரு தனித்துவமான கலைநயத்தை கொண்டவை. அந்தக் கலைநயத்தை, எந்த இலக்கிய, சினிமாக் கோட்பாட்டையும் அறிந்திராத சாமானிய வெகுஜன சினிமா ரசிகனால் எளிதில் புரிந்துகொண்டுவிட முடியும். அவரது காட்சிச் சட்டகங்கள் தரும் உணர்வெழுற்சி, வெகு எளிதாக கதாபாத்திரங்களின் மன அடுக்குகளுக்கு உள்ளே நுழைந்து அவற்றின் உணர்வுகளோடு கரைந்துவிடும் மாயத்தை நிகழ்த்திவிடும். அவருடைய மாஸ்டர் பீஸ் என்று வருணிக்கப்படும் ‘ப்யாஸா’ ( Pyaasa 1957) இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
விஜய் (குரு தத்) ஒரு உருது கவிஞன். அவனுடைய கவிதைகள் சமூகச் சிக்கல்கள், பசியும் வறுமையும் வர்க்கமும் பற்றியவை. ஆனால் பதிப்பாளர்களும் சரி, சமூகம் சரி அவற்றை மதிக்கவில்லை; காதல் கவிதைகள் எழுதாததால் அவன் பதிப்பாளரால் புறக்கணிக்கப்படுகிறான். தாயைத் தவிர அவனது உடன்பிறந்த அண்ணன்கள் அவனையும் அவனது படைப்பாற்றலையும் புரிந்துகொள்ளவில்லை. அவன் எழுதிய கவிதைகளை என்ன செய்யக்கூடாதோ அதைச் செய்துவிடுகிறார்கள். குலாபோ (வஹீதா ரஹ்மான்) ஒரு பாலியல் தொழிலாளிப் பெண். விஜயின் கவிதைகளை வாசிக்கும் அவள், அதிலிருக்கும் சொற்களோடு கரைந்துபோகிறாள். எதிர்பாராத சூழ்நிலையில் சந்திக்கும் அவனை ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரிக்கத் துடிக்கிறாள். இன்னொரு பெண்ணும் விஜய் வாழ்க்கையில் உண்டு. அவள் மீனா (மாலா சின்ஹா). விஜயின் கல்லூரிப் பருவத்துக் காதலி. பணக்கார பதிப்பாளர் ஒருவனை மணந்துகொண்டவள். அவன் விஜயின் கவிதைகளை அபகரிக்க நினைக்கிறான். ஒரு விபத்தில் விஜய் இறந்துவிட்டதாக அனைவரும் நம்புகிறார்கள். இதைப் பயன்படுத்தி, அவன் கவிதைகளை மீனாவின் கணவன் பிரசுரிக்கிறான். அவை பெரும் புகழ் பெறுகின்றன. ஆனால், விஜய் இந்தப் பொய்யான புகழையும் பணம் சார்ந்த உலகத்தையும் நிராகரிக்கிறான். இறுதியில் அந்தக் கவிஞனுக்கும் அவனுடைய கவிதைகளுக்கும் என்னவானது என்பதை யூடியூபில் பாருங்கள்.
‘பியாசா’ படத்தின் கதையைச் சொல்லிவிட்டேன் என்று என் மீது நீங்கள் வருந்தத் தேவையில்லை. உங்களின் எல்லா முன்முடிவுகளையும் குருதத்தின் திரைமொழி தகற்தெரியும். அவரது தோற்றமும் நடிப்பும் உங்களைத் தொந்தரவு செய்யும். ஓர் எழுத்தாளராக, இயக்குநராக, சட்டகங்களை அவர் உருவாக்கிய படைப்பாளுமையில் ‘பியாசா’ ஒரு பழைய கிளாசிக் என்பதை நம்ப உங்கள் மனம் மறுக்கும். ஒரு திரைப்படத்தை இலக்கியத்துக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்த முடியுமா என்று வியந்து போவீர்கள்.
1925இல் பெங்களூருவில் பிராமணக் குடும்பத்தில் பிறந்த குருதத், வளர்ந்ததும் படித்ததும் கொல்கத்தாவில். இதனால், தாய்மொழியைவிட, வங்காள மொழியால் ஈர்க்கப்பட்டு, தன்னுடைய 12ஆம் வயது முதல் வங்காள இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினார். பிறப்பால் ஒரு கொங்கணியாக இருந்தாலும் பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியவற்றால் தன்னையொரு வங்காளியாக வரித்துக்கொண்டார். இதனால், தன்னுடைய இயற்பெயரான வசந்த குமார் என்பதை குரு தத் என்று மாற்றிக்கொண்டார்.
அல்மோராவில் இயங்கி வந்த இந்தியப் பண்பாட்டு மையத்தில் நடனம், சங்கீதம் ஆகியவற்றில் 5 வருடங்கள் பயிற்சி பெற்றார். 21ஆம் வயதில் 1944இல் புனேவில் புகழ்பெற்ற பிரபாத் ஸ்டுட்யோவில் ஒப்பந்த அடிப்படையில் நடனக் கலைஞராகவும் துணை நடிகராகவும் சேர்ந்து உதவி இயக்குநராக உயர்ந்தார். அங்கே குரு தத்துக்கு நெருங்கிய நண்பனாகக் கிடைத்தவர்களில் தேவ் ஆனந்த் முதன்மையானவர்.
திரையுலகில் இயங்கிக்கொண்டே தன் இலக்கிய தாகத்தையும் வெளிப்படுத்திய குரு தத், இல்லஸ்டிரேடட் வீக்லி’ வார இதழில் சிறுகதைகள் எழுதி கவனம் பெற்றார். பின்னர், 1951-ல் தேவ் ஆனந்த் நடித்த ‘பாஸி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து ‘ஜால்’ படம் வெளிவந்தது. அடுத்து ‘பாஸ் (Bass)’ படத்தில் நடிகனாக அறிமுகமானார். இதன்பின்னர்தான் குரு தத் உருவாக்கிய பொற்காலம் பலிவுட்டில் தொடங்கியது.
ஜானி வாக்கர், வஹீதா ரஹ்மான் உள்ளிட்ட பல நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய பெருமை பெற்ற, குரு தத்தின் நடிப்பு, தயாரிப்பு, இயக்கத்தில் 1957இல் வெளிவந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது ‘ப்யாஸா’. உலகின் நூறு சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக ‘ப்யாஸா’ இடம்பெற்றிருப்பதே குரு தத் என்கிற படைப்பாளின் படைப்பாளுமையை இன்னும் பலகாலம் சொல்லிக்கொண்டிருக்கும்.
– இந்து தமிழ் திசை தீபாவளி மலர் 2025இல் (தற்போது கடைகளில் விற்பனையாகி வருகிறது), இந்த ஆண்டில் நூற்றாண்டு காணும் 10 திரை ஆளுமைகள் குறித்து எழுதியிருக்கிறேன். குரு தத் பற்றிய பதிவைத்தான் இங்கே வாசித்தீர்கள். 39 வயதில் மறைந்த குரு தத் இன்னும் ஒரு பத்தாண்டு இருந்திருந்தால் மேலும் பல சிறந்த படைப்புகளைக் கொடுத்திருப்பார்.