சமீபத்திய பேட்டி ஒன்றில் மைக்கேல் ஜாக்சன் உடனான சந்திப்பு குறித்துப் பேசிய அமிதாப் பச்சன், “ஒரு முறை நான் நியூயார்க் ஹோட்டலில் தங்கி இருந்தபோது கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்தபோது மைக்கேல் ஜாக்சன் வெளியே நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் அறை மாறி வந்துவிட்டார். இருப்பினும் அவருடன் அமர்ந்து பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் மிகவும் பிரபலமானவராக இருந்தாலும் மிகவும் தன்னடக்கமாக இருந்தார்.
அப்படிதான் அவரை முதலில் நான் சந்தித்தேன். பிறகு அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தேன். நாங்கள் ஹோட்டல் ஒன்றுக்குச் சென்றபோது அங்கு எங்களுக்கு அறைகள் எதுவும் கிடைக்கவில்லை. அந்த ஹோட்டலில் 350 அறைகளும் மைக்கேல் ஜாக்சன் மற்றும் அவரது குழுவினருக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்கள். அவர் நடத்தும் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்று முயன்றோம். அவர் ஒரு அபாரமான கலைஞர், அவரது பாடலும் நடனமும் அபாரமானவை. மைக்கேல் ஜாக்சனைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் அமிதாப் பச்சன்.