பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்னுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை தற்போது தீபிகா படுகோன் வீட்டில் இருந்து கவனித்து வருகிறார். குழந்தை பிறந்த கையோடு தீபிகா படுகோன் புதிதாக வீடு ஒன்றை விலைக்கு வாங்கி இருக்கிறார். மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் தனது கணவர் ரன்வீர் சிங் தாயார் அஞ்சு பவ்னானி வீட்டிற்கு அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் சாகர் ரேஷம் ஹவுசிங் சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.17.8 கோடிக்கு அந்த வீட்டை வாங்கி இருக்கிறார்.
15வது மாடியில் இருக்கும் இந்த வீடு 1,845 சதுர அடி கொண்டதாகும். அதோடு அந்த வீட்டை தனது தயாரிப்பு நிறுவனம் சார்பாக வாங்கி இருக்கிறார். கடற்கரையை நோக்கி இருக்கும் அந்த வீடு தீபிகா படுகோனின் மாமியார் வீட்டிற்கு அடுத்த கட்டடத்தில் இருக்கிறது. இம்மாதம் 12-ம் தேதி வீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முத்திரை தீர்வையாக ரூ.1.07 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் ரன்வீர் சிங் தாயாரும் இதே கட்டடத்தில் 19.13 கோடிக்கு ஒரு வீட்டை வாங்கினார்.
ஏற்கனவே நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு அருகில் அடுக்கு மாடி குடியிருப்பில் தீபிகா படுகோன், அவரின் கணவர் ரன்வீர் சிங்கும் சேர்ந்து 4 மாடிகளை மொத்தமாக விலைக்கு வாங்கி இருக்கின்றனர். அதே கட்டடத்தில் மாடியில் 1300 சதுர அடியையும் தங்களது சொந்தமாக்கி இருக்கின்றனர். அதன் மொத்த மதிப்பு ரூ.100 கோடியாகும். தங்களது மகளுடன் பாலிவுட் தம்பதி இந்த புதிய வீட்டில் குடியேற இருக்கிறது. 4 மாடிகள் கொண்ட வீடு 11,266 சதுர அடி கொண்டது ஆகும். 2021-ம் ஆண்டு மகாராஷ்டிராவின் கடற்கரை நகரமான அலிபாக்கில் 22 கோடிக்கு கடற்கரையில் பங்களா ஒன்றையும் இருவரும் சேர்ந்து வாங்கினர். 2018-ம் ஆண்டு தீபிகாவும், ரன்வீர் சிங்கும் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…