`கிராமத்துக் கதை, அதிலொரு நாட்டுப்புறப் பாடல் இருக்க வேண்டும்” என ஒரு படத்தின் இயக்குநர் சூழலைச் சொல்லி முடித்த அடுத்த நொடியே இசையமைப்பாளர்களுக்கு நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் முகமும், ஓங்கிய குரலும்தான் நினைவுக்கு வரும். இப்படி சட்டென நினைவுக்கு வருமளவுக்கு திரையிசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் பெரும் பங்காற்றியிருக்கிறார் புஷ்பவனம் குப்புசாமி.
சமூக வலைதளங்களில் அவரின் பாடல்களும் தற்போது தொடர்ந்து வைரலாகிக் கொண்டிருக்கின்றன. `குட் பேட் அக்லி’ படத்தில் இவரின் `தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலைப் பயன்படுத்தியது சமீபத்தில் வைரலானது பலருக்கும் நினைவிருக்கலாம். திரையிசையைத் தாண்டி இவரின் நாட்டுப்புறப் பாடல்களையும் ரீமேக் செய்து வைப் செய்கின்றனர் ஜென் சி-கள்.

சமீபத்தில் வெளிவந்த `இட்லி கடை’ படத்தில் இவர் பாடிய `எத்தனை சாமி’ பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில், நம் விகடன் டிஜிட்டல் தளத்தின் தீபாவளி ஸ்பெஷலுக்காக அவரைப் பேட்டி கண்டேன்.
தீபாவளி வாழ்த்து சொல்லி பேசத் தொடங்கியதும், “வணக்கம்ங்க. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீபாவளின்னு சொன்னதும் பலருக்கு நினைவுக்கு வருவது பட்டாசும் புத்தாடைகளும்தான். ஆனா, என்னைப் பொறுத்தவரை அன்றைய தினம் ஒவ்வொரு இல்லங்களில் ஏற்றப்படும் ஒளிதான் என் நினைவுக்கு வரும்.
அதுக்குதான் முக்கியத்துவம் அளிப்போம். சின்ன வயசுல, எங்க வீட்டுல புத்தாடைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பாங்க. பட்டாசு வாங்கித் தர மாட்டாங்க. ஆனா, நாங்க யாருக்கும் தெரியாமல் பட்டாசு வாங்கி, எங்களுடைய தந்தை இல்லாத நேரம் பார்த்து அதை வெடிச்சு மகிழ்ந்த நினைவுகளெல்லாம் இருக்கு,” என்றவர் புத்துணர்ச்சியுடன் கேள்விகளுக்கு ஆயத்தமானார்.