மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77.
கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு பிறந்தவர் மு.க.முத்து. 1970-ல் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கிய மு.க முத்து ‘பூக்காரி’, ‘பிள்ளையோ பிள்ளை’, ‘அணையா விளக்கு’, ‘சமையல்காரன்’, ’இங்கும் மனிதர்கள்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

கருணாநிதியின் கலையுலக வாரிசாகக் கருதப்பட்ட இவர் நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கெனத் தனிப்பாணியை வைத்திருந்தார்.
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பாடல்களைப் பாடியும் அசத்தி இருக்கிறார். “நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலும், ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும். கடைசியாக 2008-ம் ஆண்டு இசையமைப்பாளர் தேவாவின் இசையில் ‘மாட்டுத்தாவணி’ படத்தில் ஒரு பாடலைப் பாடி இருக்கிறார்.