ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படவிருக்கும் ‘லாபத்தா லேடீஸ்’ குறித்து இயக்குநர் கிரண் ராவ் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்திய சார்பாக ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் தேர்வு செய்து அனுப்பப்பட்டிருக்கிறது. திரையுலகில் உயரிய விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வெல்வதை வாழ்நாள் கெளரவமாகத் திரையுலகினர் கருதுகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டு ஆஸ்கர் விருதிற்கான ‘சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவு’ போட்டிக்கு அனுப்ப, இந்தியா சார்பில் மொத்தம் 29 படங்களைப் பரிசீலித்து, அதில் லாபத்தா லேடீஸ் படத்தைப் பரிந்துரைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 29 படங்களில், மகாராஜா, கொட்டுக்காளி, ஜமா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான் ஆகிய 6 தமிழ் படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆமிர் கான் தயாரிப்பில் அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லாபத்தா லேடீஸ்’. பாலின சமத்துவத்தின் அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் மார்ச் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 26-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி-யிலும் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்றது. சமீபத்தில்கூட இத்திரைப்படம் உச்ச நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது.
தற்போது இந்தப் படம் இந்தியா சார்பாக ஆஸ்ருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக பேசியிருக்கும் படத்தின் இயக்குநர் கிரண் ராவ், “ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் அதிகாரபூர்வ நுழைவாக எங்களின் ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த அங்கீகாரம் எனது முழு படக்குழுவினரின் அயராத உழைப்புக்கு கிடைத்த ஒரு சான்றாகும். அவர்களின் அர்ப்பணிப்பும் ஆர்வமும்தான் இந்த கதையை உயிர்ப்பித்தது.
அமீர் கான் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் தந்த ஆதரவிற்காக எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அபாரமான திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் இந்தப் படத்தை வெற்றியடைய செய்த ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் எனது நன்றிகள். பார்வையாளர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. இந்தத் திரைப்படத்தின் மீதான உங்கள் நம்பிக்கையே எங்களை ஆக்கப்பூர்வமான படைப்புகளைக் கொடுப்பதற்கு ஊக்கமளிக்கிறது. தொடர்ந்து உற்சாகமாக முன்னோக்கி பயணிப்போம்!” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU