சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ படத்தை அடுத்து த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் படம் இது. மல்டி ஸ்டார் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. ரஜினியுடன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர், யோகிபாபு என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கின்றனர். அமிதாப் ஒரு கௌரவ தோற்றத்தில் வருகிறார். படத்தின் திருப்புமுனையான காட்சியில் அவரும் ரஜினியும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இதுவரை பல படங்களில் வில்லனாக மிரட்டி வந்த பகத் பாசில், இந்த படத்தில் வித்தியசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இம்மாதம் 20ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
ரஜினியைப் பொறுத்தவரை, அவரது படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் தவறாமல் பங்கேற்பதுடன், படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களையும் பாராட்டுவதுடன், முத்தாய்ப்பாக எதாவது ஒரு விஷயத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். சமீபத்திய ‘ஜெயிலர்’, ‘லால்சலாம்’ ஆடியோ ஃபங்ஷன்களுக்கு கூட அவர் வந்திருக்கிறார். அப்படி ‘வேட்டையன்’ விழாவிற்கும் அவர் வருகை தருகிறார். படத்தில் நடிக்கும் அமிதாப், ராணா, பகத் பாசில் எனப் பலருக்கும் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழா மேடையில் அனிருத்தின் லைவ் கச்சேரி நடைபெறுகிறது. இதற்கான ஒத்திகை அனிருத் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.