விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘மருதம்’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயியின் வாழ்வியல், விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாக பேசியிருக்கும் படம் ’மருதம்’. வெங்கடேசன் தயாரித்துள்ள இப்படத்தினை வி.கஜேந்திரன் இயக்கியுள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் பணி மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் ஏமாற்றத்திற்குள்ளாகி பாதிகப்படும் ஒரு விவசாயி, அந்த பாதிப்பிலிருந்து மீள்கிறானா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை. அனைவரையும் கவரும் வகையில் இதனை கமர்ஷியல் படமாக உருவாக்கி இருக்கிறது படக்குழு. தமிழின் ஐந்திணைகளில் விவசாய நிலத்தினை குறிக்கும் மருத நிலத்தின் அடையாளமாக இப்படத்திற்கு ’மருதம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ரக்ஷனா, அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ் உள்ளிட்ட பலர் விதார்த்துடன் நடித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கதைக்களம் நடப்பதால் அப்பகுதியைச் சுற்றி இதன் முழுப்படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக அருள் சோமசுந்தரம், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.