அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவிருப்பதை மாரி செல்வராஜ் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் மாரி செல்வராஜ். இப்படத்தினை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், பேட்டியொன்றில் அடுத்து தனுஷ் படத்தினை இயக்கவிருப்பதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இப்படத்தினை தனுஷ் மற்றும் லேவ்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.
வரலாற்றுப் பின்னணியில் பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் படத்தினை முடித்துவிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி, கார்த்தி ஆகியோரிடமும் கதை சொல்லி ஒகே செய்து வைத்துள்ளார் மாரி செல்வராஜ். இதில் கார்த்தி நடிக்கும் படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமும், இன்பன் உதயநிதி நடிக்கும் படத்தினை ரெட் ஜெயன்ட் நிறுவனமும் தயாரிக்கவுள்ளது.
தற்போது விக்னேஷ் ராஜா இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனைத் தொடர்ந்து ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் படத்தினை தனுஷ் தொடங்குவார் என தெரிகிறது.