பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு நாளை 60வது பிறந்த நாளாகும். இப்பிறந்தநாளை ஆமீர் கான் தனது பாலிவுட் நண்பர்களுடன் சேர்ந்து முன்கூட்டியே கொண்டாடி இருக்கிறார். இதற்காக நேற்று இரவு நடிகர் சல்மான் கான், நடிகர் ஷாருக்கான் ஆகியோர் மும்பை பாந்த்ராவில் உள்ள ஆமீர் கான் இல்லத்திற்கு வந்தனர்.
ஆமீர் கான் இல்லத்திற்கு சல்மான் கான் வந்தபோது பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க அனுமதித்தார். ஆனால் ஷாருக்கான் பத்திரிகையாளர்களை தவிர்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். ஷாருக்கானுடன் அவரது தனிப்பட்ட செயலாளர் பூஜாவும் கலந்து கொண்டார். பிறந்தநாள் பார்ட்டி இரவு அதிக நேரம் நீடித்தது. பார்ட்டி முடிந்த பிறகு ஆமீர் கான் வாசல் வரை வந்து இரண்டு பேரையும் ஆரத்தழுவி வழியனுப்பி வைத்தார். இது தொடர்பான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. சல்மான் கான் வெள்ளை சட்டையும், கருப்பு பேண்டும் அணிந்திருந்தார்.
மூன்று கான்களும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவேண்டும் என்ற கோரிக்கை பாலிவுட்டில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. எனவே மூவரும் இணைந்து படத்தில் நடிப்பது குறித்து இந்த பிறந்தநாள் விழாவில் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. மூன்று கான்களும் மிகவும் அபூர்வமாகத்தான் இணைவது வழக்கம். சமீபத்தில் ஆமீர் கான் மகனின் புதிய பட சிறப்பு காட்சியில் மூன்று கான்களும் கலந்து கொண்டனர்.
சல்மான் கான் நடித்து முடித்துள்ள சிகந்தர் படம் இம்மாத இறுதியில் வெளி வருகிறது. ஷாருக்கான் தனது மகள் சுஹானாவை பிரதானப்படுத்தி கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆமீர் கானும் ஜிதாரே ஜமீன் பர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆனால் படம் எப்போது திரைக்கு வருகிறது என்பதை ஆமீர் கான் இன்னும் தெரிவிக்கவில்லை.